ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு...

by Admin / 20-08-2021 01:34:53pm
ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு...

 

ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சென்ட்ரல் உட்பட தமிழகத்தில் உள்ள 47 ரயில் நிலையங்களிலும் பயணிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளதாக கூடுதல் டி.ஜி.பி சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.  
 
ரயில்வே காவல்துறை சார்பில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் பயணிகளுக்கு கொரோனா நோய் தொற்று சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு  நிகழ்சியை ரயில்வே காவல்துறை பொறுப்பு கூடுதல் டி.ஜி.பி  சந்தீப் ராய் ரத்தோர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ரயில்வே காவல்துறை மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையின் மகளிர் போலீசார் ஆடல் பாடலுடனும், நாடக நிகழ்ச்சி மூலமாகவும் பயணிகளுக்கு கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

அதன் தொடர்ச்சியாக சென்ட்ரல் ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு கொரேனா நோய் தொற்று பற்றிய விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள், முக கவசம் மற்றும் கிருமிநாசினி ஆகியவற்றை கூடுதல் டி.ஜி.பி சந்தீப் ராய் ரத்தோர் உடனிணைந்து ரயில்வே காவல்துறை ஐ.ஜி கல்பனா நாயக்,  ரயில்வே காவல்துறை டி.ஐ.ஜி ஜெயகவுரி வழங்கினர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கூடுதல் டி.ஜி.பி சந்தீப் ராய் ரத்தோர், ரயில் நிலையத்திற்கு வரும் போது பயணிகள் கண்டிப்பாக முககவசம்  அணிந்து உரிய கொரோனா வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும், பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அரசின் அறிவுறுத்தலின்படி கொரோனா விழிப்புணர்வை ரயில்வே காவல்துறை நடத்தி வருவதாகவும், தமிழகத்தில் உள்ள 47 இருப்புப் பாதை காவல் நிலையங்கள் உள்ள ரயில் நிலையங்களிலும் வரும் 5 நாட்களுக்கு இந்த விழிப்புணர்வை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் ரயில்வே காவல்துறையில் காலிப் பணியிடங்களை நிரப்பும் பணி நடைபெற்று வருவதாகவும், தற்போது பயிற்சியில் உள்ளவர்கள் பயிற்சி முடித்து வரும்பொழுது காவலர்களின் பற்றாக்குறை குறையும் எனவும், அதுவரை தமிழ்நாடு காவல்துறையின் காவலர்கள் மூலம் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார்.

 

Tags :

Share via