தேசியக்கொடி அவமதிப்பு வழக்கு :  ரத்து செய்யக்கோரி எஸ்வி சேகர் மனு

by Editor / 21-08-2021 04:02:20pm
தேசியக்கொடி அவமதிப்பு வழக்கு :  ரத்து செய்யக்கோரி எஸ்வி சேகர் மனு

 


தேசியக் கொடியை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, பாஜக நிர்வாகி எஸ்.வி. சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசு அறிவித்த மும்மொழி கொள்கைக்கு முதல்வர் பழனிசாமி உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த ஆண்டு இது தொடர்பாக வீடியோ வெளியிட்ட பாஜகவின் எஸ்வி சேகர், தேசிய கோடியை அவமதிக்கும் விதமாகவும் முதல்வர் பழனிசாமியை கடுமையாக விமர்சித்தும் பேசியிருந்தார்.
எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி போர்வை போர்த்தியது, பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தலைவர்களின் சிலைகளை இவ்வாறு களங்கம் செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்திருந்தார்.
இதற்கு எஸ்.வி.சேகர், காவியை களங்கம் என குறிப்பிடும் தமிழக முதல்வர், களங்கமான தேசியக் கொடியைத்தான் ஆகஸ்ட் 15ஆம் தேதி ஏற்றப்போகிறாரா எனவும், தேசியக் கொடியில் உள்ள காவியை வெட்டி விட்டு வெள்ளை மற்றும் பச்சை நிறம் கொண்ட கொடியை ஏற்றப்போகிறாரா என்கிற வகையில் வீடியோ வெளியிட்டார்.
தேசியக் கொடியை அவமதிக்கும் வகையிலும் பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டதாக கூறி எஸ்.வி சேகருக்கு எதிராக, சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், எஸ்.வி சேகர் மீது மத்திய குற்ற பிரிவினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் காவல் துறையினர் தன்னை கைது செய்யக் கூடும் என பயந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, மத்திய குற்றப்பிரிவு போலீசார் சார்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ. நடராஜன், தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் இனி பேசமாட்டேன், இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது என எஸ்.வி சேகர் உத்தரவாதம் அளிப்பதோடு, நடந்தவற்றுக்கு வருத்தம் தெரிவித்து நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்தால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கலாம் எனவும், அதே நேரத்தில் வழக்கை ரத்து செய்ய முடியாது எனவும் தெரிவித்தார்.
இதனையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மனு தாக்கல் செய்த எஸ்வி சேகர், தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் பேசியதற்கும், தமிழக முதல்வர் குறித்து பேசியதற்கும் வருத்தம் தெரிவித்திருந்தார். தான் இனி வாழ்நாள் முழுவதும் ஒருபோதும் தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் பேச மாட்டேன் என தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், எஸ்.வி.சேகருக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். விசாரணைக்கு தேவைப்படும்போது காவல்துறை முன் ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்தனர்.
எஸ்.வி.சேகருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை, சென்னை எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி சால்வை போர்த்திய செயலை களங்கம் எனத் தெரிவித்த முதல்வர், களங்கமான தேசிய கொடியை தான் ஏற்றப் போகிறாரா என கேள்வி எழுப்பியதாகவும், தேசியக் கொடியை அவமதிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.மேலும், சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் எனவும், வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், புகார்தாரரை எதிர்மனுதாரராக சேர்க்கும்படி எஸ்.வி.சேகர் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தார்.

 

Tags :

Share via