பொள்ளாச்சி பாலியல் வழக்கு: இபிஎஸ்-ஐ விசாரிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

by Staff / 11-02-2023 04:52:53pm
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: இபிஎஸ்-ஐ விசாரிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின்
பெயர்களுடன் அரசாணை வெளியிட்ட விவகாரத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி
பழனிசாமியிடம் விசாரணை நடத்தவும், காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனை
பணிநீக்கம் செய்யக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில்,கடந்த 2019-ம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களுக்குபாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதாகவும், பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் சகோதரர் அளித்த புகாரில் 9 பேர் மீது மட்டுமே குற்றம்சாட்டப்பட்டதாகவும், முழுமையாக விசாரிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் பாதிக்கப்பட்ட சில
பெண்கள் மற்றும் புகார் அளித்த சகோதரரின் பெயர்களை வெளியிட்டதால், மற்ற
பெண்கள் புகார் அளிக்க முடியாமல் இன்னலுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளானதாக
குறிப்பிட்டுள்ளார்.பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை வெளியிட்ட அப்போதைய காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனை பணிநீக்கம் செய்ய வேண்டும் எனவும், அரசாணையில் பெயர்களை இடம்பெறச் செய்தது குறித்து அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும், அப்போதைய தலைமை செயலாளரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி தமிழக முதல்வரின் முகவர் துறையிடம் மனு அளித்ததாக குறிப்பிட்டுள்ளார்.அந்த புகார் மனு ஜூலை 22ம் தேதி டிஜிபி மற்றும் கோவை எஸ்.பி.க்குபரிந்துரைக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில்
குறிப்பிட்டுள்ளார். எனவே, கடந்த ஆண்டு ஜனவரியில் அளித்த மனு மீது நடவடிக்கை
எடுக்க உத்தரவிட வேண்டுமென மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் திங்கள்கிழமை (பிப்ரவரி 13) விசாரணைக்கு வரவுள்ளது.

 

Tags :

Share via