இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது

by Editor / 27-04-2025 11:09:49pm
இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது

தென்காசி மாவட்டத்தில் வாகன விபத்துகளை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவின் பேரில் காவல்துறையினர் சோதனைகளை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் சிவகிரி சேனைத்தலைவர் மண்டபம் அருகே பெண் ஒருவர் அவரது 09 வயது மகளுடன் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் வந்த நபர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த 09 வயது சிறுமியின் மீது மோதி விபத்தை ஏற்படுத்துள்ளார். இதில் சிறுமிக்கு தலையில் சிறிது காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் திரு. வரதராஜன் அவர்கள் விசாரணை மேற்கொண்டதில் இருசக்கர வாகனத்தில் விபத்தை ஏற்படுத்தியது சிவகிரியை சேர்ந்த 15 வயது சிறுமி என தெரிய வந்தது. இது தொடர்பாக மேற்படி 15 வயது சிறுமிக்கு இரு சக்கர வாகனத்தை ஓட்ட அனுமதித்த சிறுமியின் தந்தையான சிவகிரி வடக்கு தெருவை சேர்ந்த ஜோதி ராமலிங்கம் என்பவரின் மகனான குருசாமி என்ற நபர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.மேலும்  இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  கூறுகையில் சாலை விதிகளை பெற்றோர்கள் தான் தங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும், பெற்றோர்கள் சாலை விதிகளில் அலட்சியம் காட்டினால் அது உங்கள் குழந்தைக்கு பெரும் ஆபத்தில் முடியலாம் இது போன்ற விஷயங்களில் அலட்சியம் காட்டக்கூடாது மீறும் பட்சத்தில் 18 வயது நிரம்பாத சிறுவர் சிறுமிகளுக்கு இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதித்த பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்..

 

Tags : இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது

Share via