மதுரையில் வெகு விமர்சையாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா:

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சருகுவலையப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அரியூர் பட்டி கிராமத்தில் உள்ள மோகினி சாத்தன் கண்மாயில் மீன்பிடி திருவிழா பாரம்பரிய முறைப்படி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் வெளி மாவட்டங்களான திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார கிராமங்களான சருகுவலையப்பட்டி, வடக்கு வலையபட்டி, கீழவளவு, சாத்தமங்கலம், கீழையூர்,தனியாமங்கலம் மட்டங்கிபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து நள்ளிரவு முதலே இப்பகுதியில் பொதுமக்கள் குவிய ஆரம்பித்தனர்.
ஆண்டுதோறும் இந்த கண்மாயில் சமத்துவ மீன்பிடித் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இன்று நடைபெற்ற மீன்பிடி திருவிழா நடத்தப்படும் என சமூக வலைதளங்கள் மூலம் அறிவிப்பு செய்யப்பட்ட நிலையில், இன்று காலை முதலே மீன்களை பிடிக்க கண்மாய் கரையில் காத்துக் கிடந்தனர்.
தொடர்ந்து கிராம பெரியவர்கள் கோவிலில் சாமி கும்பிட்டு வந்து வெள்ளை வீசி மீன்களை பிடிக்க அனுமதி அளித்தவுடன் ஒன்று சேர கண்மாய்க்குள் இறங்கிய பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு கச்சா, ஊத்தா, உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் மூலம் நாட்டு வகை மீன்களான கட்லா, கெளுத்தி, ரோகு, ஜிலேபி, அயிரை உள்ளிட்ட மீன்களை பிடித்து மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சரிசமமாக கலந்து கொள்ளும் இது போன்ற சமத்துவ மீன் பிடித் திருவிழா நடத்தப்படுவதன் மூலம் நல்ல மழை பொழிந்து விவசாயம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதுபோன்ற மீன்பிடித் திருவிழாவில் மக்கள் தங்களுக்குள் ஏற்படும் வேற்றுமையை மறந்து சமத்துவமாக மீன்களை பிடித்து மகிழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Tags : மீன்பிடி திருவிழா: