தமிழகத்தில் 14 நாட்களுக்கு தீவிர ஊரடங்கு?
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஏப்ரல் 18 முதல் 14 நாட்களுக்கு மாநிலத்தில் தீவிரமான ஊரடங்கை செயல்படுத்துமாறு அரசு மருத்துவர்கள் சங்கம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனாவின் 2-வது அலை மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்தாலும் கூட கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய - மாநில அரசுகள் திணறி வருகின்றன. தமிழகத்திலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று முதன் முறையாக தமிழகத்தில் 8,449 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கியுள்ளது..
இந்நிலையில் தமிழக அரசுக்கு அரசு மருத்துவர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. அதில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பெருமளவில் அதிகரித்து வருவது சுகாதாரப் பணியாளர்கள் மீது பெரும் சுமையை ஏற்படுத்தக்கூடும் என்று சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் "இது தற்போதைய நெருக்கடியை சமாளிக்க லாக்டவுனை அமல்படுத்த வேண்டும்.. ஏற்கனவே அனுபவித்தபடி, லாக்டவுனை அமல்படுத்துவதால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த உதவும். கொரோனா இளைஞர்களை அதிகம் பாதித்து வருவதால், கோவிட் -19 தடுப்பூசிகளுக்கான வயது வரம்புகளை 45 வயதிலிருந்து 18 வயதாக குறைக்க வேண்டும்" என்று அந்த தெரிவிக்கப்பட்டுள்ளது..
மறுபுறம், கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த மாநிலத்தில் இரவு ஊரடங்கு உத்தரவை மீண்டும் விதிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. "இரவு ஊரடங்கு உத்தரவை பிறப்பிப்பது குறித்தும், ஜிம்களை மூடுவது போன்ற கட்டுப்பாடுகளை விதிக்கவும் தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
Tags :



















