பென்னிகுயிக் விவகாரம்- சட்டப்பேரவை ஸ்டாலின், செல்லூர் ராஜு மோதல்

by Editor / 25-08-2021 01:23:31pm
 பென்னிகுயிக் விவகாரம்- சட்டப்பேரவை ஸ்டாலின், செல்லூர் ராஜு மோதல்

மதுரையில் ஜான் பென்னிகுயிக் (John Pennycuic) இல்லத்தில் கலைஞர் நூலகம் அமைக்கப்படுவதாக அதிமுக மீண்டும் குற்றம்சாட்டிய நிலையில் இந்த விவகாரம் இன்றைய சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது.தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்த பிறகு சென்னையில் அண்ணா நூலகம் அமைக்கப்பட்டதுபோல் மதுரையில் கலைஞர் பெயரில் சர்வதேச தரத்தில் அனைத்து வசதிகளுடன் 70 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட நூலகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து, நூலகம் அமைக்க பல இடங்களை ஆய்வு செய்த அதிகாரிகள், மதுரையிலிருந்து நத்தம் செல்லும் சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 2 ஏக்கர் பரப்பளவுள்ள வளாகத்தை தேர்வு செய்தனர். இதை இறுதி செய்யும் பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில், அந்த கட்டடம் பென்னிகுயிக்கின் இல்லம் என்றும் அதை இடித்து விட்டு கருணாநிதிக்கு நூலகம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார். இதனால், இந்த விவகாரம் சர்ச்சையானது.

இந்த விவகாரம் தொடர்பாக செல்லூர் ராஜு பேரவையில் பேசியபோது பதிலளித்த தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நூலகம் அமையவுள்ள இடத்தில் பென்னிகுயிக் வாழ்ந்ததாக கூறுவது தவறு என்று பதிலளித்தார்.

ஸ்டாலின் ஆவேசம்

அப்போது குறுக்கிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், "பென்னிகுயிக் இல்லத்தை திமுக அரசு கலைஞர் நூலமாக மாற்றுவதாக முன்னாள் அமைச்சர் கூறுகிறார். பென்னிகுயிக் இல்லத்தை இடித்து விட்டு கலைஞர் நூலகம் கட்டப்படவில்லை. ஆதாரம் இருந்தால் காட்டுங்கள். இந்த அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுத்து மாற்ற தயாராக இருக்கிறது. சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சராக இருந்தவர், இரண்டு முறை பேரவை உறுப்பினராக இருந்தவர், இதுபோன்ற ஆதாரமற்ற தகவல்களை வெளியிடக்கூடாது. அதுவும் பேரவையில் இதுபோன்ற தவறான தகவல்கள் பதிவாகக் கூடாது என்பதாலேயே இந்த விளக்கத்தை தருகிறேன்," என்று கூறியுள்ளார்.

மதுரை இல்லத்தில் வாழ்ந்தாரா பென்னிகுயிக்?

இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக, பாமக மற்றும் சில விவசாய அமைப்புகள், மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டதைத் தொடர்ந்து, மதுரை மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் இந்த மாத தொடக்கத்தில் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டார். அதில், "மதுரையில் 70 கோடி ரூபாயில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். தென்மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் 2 லட்சம் சதுர அடியில் 8 மாடிக் கட்டடமாக இது அமைய உள்ளது. இதற்காக மதுரை நத்தம் சாலையில் உள்ள பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறையின் பொறியாளர் குடியிருப்பு வளாகம் போதுமான வசதியுடன் இருப்பதால் நூலகம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளது," என கூறப்பட்டிருந்தது.

மேலும், "இங்குள்ள குடியிருப்பில் முல்லை பெரியாறு அணையை உருவாக்கிய கர்னல் ஜான் பென்னிகுயிக் வாழ்ந்ததாகக் கூறப்பட்டது. 15.1.1841 அன்று பிறந்து 9.3.1911 அன்று பென்னிகுயிக் மறைந்தார். ஆனால், ஆவணங்களைப் பரிசீலித்துப் பார்த்தபோது நூலகத்துக்குத் தேர்வாகியுள்ள கட்டடமானது, 1912 ஆம் ஆண்டு பூமி பூஜை போடப்பட்டு 1913 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இது பொதுக் கட்டடப் பதிவேடு எண் 159/1-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தக் கட்டடத்தில் அவர் வாழ்ந்ததற்கான சாத்தியக் கூறுகள் இல்லை," என மாவட்ட ஆட்சியர் கூறியிருந்தார்.

இதன் பிறகும் பென்னிகுயிக் மதுரை இல்லத்தில் வாழ்ந்ததாக அரசியல் கட்சிகள் கூறி வந்த நிலையில், சட்டப்பேரவையில் இதற்கான விளக்கத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் அளித்துள்ளார்.

 

Tags :

Share via