கனமழையின் காரணமாக கெலவரப்பள்ளி அணை கேஆர்பி அணை நிரம்பியது.

by Editor / 20-05-2025 10:05:34am
கனமழையின் காரணமாக கெலவரப்பள்ளி அணை கேஆர்பி அணை நிரம்பியது.

கிருஷ்ணகிரி மற்றும் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் தென்பெண்ணை ஆற்று நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக ஓசூர் கெலவரப்பள்ளி அணை மற்றும் கிருஷ்ணகிரி கேஆர்பி அணை நிரம்பி உள்ளது.

இதனிடையே தொடர் மழையின் காரணமாகவும் கெலவரப்பள்ளி அணையிலிருந்து கூடுதல் நீர் வெளியேற்றப்படுவதாலும் கேஆர்பி அணை அதன் மொத்த உயரமான 52 அடியில் தற்பொழுது 51 அடியை எட்டியுள்ளது. கேஆர்பி அணையின் நீர்வரத்து வினாடிக்கு 2400 கன அடியிலிருந்து வினாடிக்கு 3,208 கன அடியாகவும் அதிகரித்துள்ளது. கே.ஆர்.பி அணை அதன் முழு கொள்ளளவை எட்டும் தருவாயில் இருப்பதால் அணையின் பாதுகாப்பை கருதி முன்னெச்சரிக்கையாக கேஆர்பி அணையில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மேலும் அணையின் தரைபாலமானது வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. தொடர்ந்து அணைக்கான நீர்வரத்து அதிகரிக்க கூடும் என்பதால் அணையில் இருந்து எந்த நேரமும் கூடுதல் நீர் திறக்க வாய்ப்பு உள்ளது. இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்று கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் தென்பெண்ணையாற்றில் குளிக்கவோ, ஆற்றைக் கடக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் கேஆர்பி அணையின் தரைபாலமானது நீரில் மூழ்கியுள்ளதால் பொதுமக்கள் கேஆர்பி அணைக்கு செல்லவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

Tags : கனமழையின் காரணமாக கெலவரப்பள்ளி அணை கேஆர்பி அணை நிரம்பியது.

Share via