நாளை மறுதினம் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வானிலை மையம் எச்சரிக்கை.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுதினம் உருவாகுகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இந்நிலையில், கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடலில் நாளை (வரும் 21 ஆம் தேதி) வாக்கில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக, நாளை மறுதினம் (22 ஆம் தேதி) வாக்கில், அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். பிறகு இது வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடைய கூடும்.
அதேபோல், இன்று (20.05.2025) வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் நாளை (21.05.2025) முதல் 23.05.2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 24.05.2025 மற்றும் 25.05.2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.” என்று அறிவித்துள்ளது.
Tags : நாளை மறுதினம் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வானிலை மையம் எச்சரிக்கை.