100 நாட்களில் கொடுத்த பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாக கூறி ரூ.1.5 கோடி வரை மோசடி...

by Admin / 26-08-2021 01:02:41pm
100 நாட்களில் கொடுத்த பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாக கூறி ரூ.1.5 கோடி வரை மோசடி...

100 நாட்களில் அளித்த பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாக வாக்குறுதி அளித்து சுமார் 1.5 கோடி ரூபாய் வரை பெற்று மோசடி செய்த நபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.  
 
சென்னை கோடம்பாக்கம் பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஏஞ்சல் டிரேடர்ஸ் என்ற நிறுவனம் வைத்து நடத்தி வந்தவர் தியாக பிரகாசம் (43). குறிப்பாக www.aangeltrading.com என்ற வலைதளம் மூலம் 100 நாட்களில் அளித்த பணத்தை இரட்டிப்பாக்கி திருப்பி அளிக்கப்படும் என்ற விளம்பத்தை வெளியிட்டு தியாக பிரகாசம் வாடிக்கையாளர்களை ஈர்த்து வந்துள்ளார்.

 மேலும், அந்த இனைய தளத்தில் பதிவு செய்யும் நபர்களுக்கு ஒதுக்கப்படும் எண்ணில் சேரும் வாடிக்கையாளர்களிடம் பணம் பெற்று எம்.எல்.எம் முறையில் கூடுதலாக ஆள் சேர்த்தால் கமிஷனாக ஒரு தொகை தருவதாகவும் கூறி தன் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்களை குவித்துள்ளார்.

இதனை நம்பி ஆயிரக்கணக்கானோர் தியாகப் பிரகாசத்தின் நிறுவனத்தில் கோடிக் கணக்கில் பணத்தை செலுத்தி வந்துள்ளனர்.

முதலில் ஆட்களை சேர்க்கும் நபருக்கு 5 ஆயிரம் என வழங்கி ஆசையை தூண்டியதை அடுத்து வாடிக்கையாளர்கள் குவிந்துள்ளனர்.வாடிக்கையாளர்கள் செலுத்தும் பணத்தை ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து பணம் சம்பாதிக்க எண்ணிய தியாக பிரகாசம் அதை நடைமுறைப்படுத்தியபோது பெரும் நஷ்டம் ஏற்பட்டு ஏமாற்றமே மிஞ்சியது

. இதனால் தனது கோடம்பாக்கம் நிறுவனத்தை மூடிவிட்டு கடந்த 2019 ஆம் ஆண்டு தியாக பிரகாசம் தலைமறைவானார்.

இதனையடுத்து அவரது நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்த வாடிக்கையாளர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து தொடர்ச்சியாக புகார் அளிக்கத் துவங்கினர்.

 இச்சம்பவம் தொடர்பாக ஆவடியைச் சேர்ந்த நடராஜன் உட்பட 46 பேர் அளித்த புகார்களின் அடிப்படையில் தியாக பிரகாசம் 1.5 கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து இவ்வழக்கானது மத்திய  குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது

. கடந்த 2019 ஆம் ஆண்டில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் கிடப்பில் போடப்பட்டது. தியாக பிரகாசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் முறையிட்டதால்

 மீண்டும் இந்த வழக்கு தூசு தட்டப்பட்டு நிறுவனம் தொடர்புடைய அனைத்து தொடர்பு எண்களும் பயன்பாட்டில் இல்லாத நிலையில் ஒரே ஒரு தொடர்பு எண் மட்டும் கடந்த இரண்டு வருடமாக பயன்படுத்தப்பட்டு வந்ததை போலீசார் கண்டறிந்தனர்.
 
அதனடிப்படையில் அந்த தொடர்பு எண்ணை வைத்து அரக்கோணத்தை சேர்ந்த சம்மந்தப்பட்ட நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது அவர் தியாக பிரகாசத்தின் வாடிக்கையாளர்  என்பதும், தியாகப் பிரகாசம் ஆந்திர சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று குண்டூரில் வழக்கறிஞராக பதிவு செய்துள்ளர் என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர்

மேலும் தியாக பிரகாசத்தின் கிளைண்டாக இருந்து வந்த அந்த நபர் அளித்த தகவலின் அடிப்படையில் சென்னை கோட்டூர்புரம் பாரதி அவென்யூவில் உள்ள ஒரு வீட்டில் தலைமறைவாக இருந்து வந்த தியாக பிரகாசத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் வலைதள கணக்கு வாயிலாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை தான் வைத்திருந்ததாகவும், அவர்களிடம் இருந்து பெற்ற தொகை சுமார் 100 கோடியை தாண்டும் எனவும் தியாக பிரகாசம் வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 இதனையடுத்து போலீசார் தியாக பிரகாசத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இதுவரை பெறப்பட்ட 46 புகார்களுக்கான தொகை மட்டுமே 1.5 கோடி எனவும்,

 அவர் வாக்குமூலத்தின் படி இன்னும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் இவர் மோசடி செய்த தொகை 100 கோடி வரை செல்லும் என்பதால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via