உதவி ஆய்வாளர் தேர்வு தள்ளிவைப்பு-உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி.

by Staff / 10-06-2025 09:32:26am
உதவி ஆய்வாளர் தேர்வு தள்ளிவைப்பு-உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், 1,299 காவல் உதவி ஆய்வாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 4-ம் தேதி வெளியிட்டது. இதனையடுத்து, சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்தனர். வழக்கமாக காவல் துறையில் 2-ம் நிலை, முதல்நிலை மற்றும் தலைமைக் காவலர்களாக பணியில் உள்ளவர்களும் உதவி ஆய்வாளர் தேர்வுக்கு விண்ணபிப்பார்கள். இவர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும். மீதம் உள்ள 80 சதவீதம் பொதுத் தேர்வர்களுக்கானது.

 உடல் தகுதியை நிரூபித்து காவலர் பணியில் சேர்ந்தவர்களுக்கு சட்டம் ஒழுங்கு மற்றும் உளவியல் தொடர்பான கேள்விகள் மட்டுமே தேர்வில் இடம்பெறும். ஆனால், பொதுப்பிரிவில் வருபவர்களுக்கு எழுத்துத் தேர்வுடன் உடல் தகுதித் தேர்வு நடத்தப்படும். இந்த சூழலில், அண்மையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், தேர்வின்போது பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே, சீனியாரிட்டி இடம்பெற வேண்டும் என்று குறிப்பிட்டது. இதனால், 20 சதவீத ஒதுக்கீட்டில் தேர்வாகும் காவலர்களுக்குப் பின்னடைவு ஏற்படும் நிலை ஏற்பட்டது.

எனவே, ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் ஒரே தேர்வு, ஒரே மதிப்பெண் என்ற வகையில் தேர்வு நடத்தப்படுமா என்ற குழப்பம் தேர்வர்கள் மத்தியில் நிலவி வந்தது. இந்த நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி ஜுன் 28,29ம் தேதிகளில் நடைபெற இருந்த உதவி ஆய்வாளர் தேர்வு தள்ளி வைக்கப்படுவதாகவும், தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

 

Tags : உதவி ஆய்வாளர் தேர்வு தள்ளிவைப்பு-உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி.

Share via