ராமநதி அணையில் இருந்து 160 கன அடி உபரி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

by Staff / 15-06-2025 09:53:36am
ராமநதி அணையில் இருந்து 160 கன அடி உபரி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.


தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக, தென்காசி மாவட்டத்தில் உள்ள அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கம், கருப்பாநதி நீர்த்தேக்கம், ராமநதி நீர்த்தேக்கம், கடனாநதி நீர்த்தேக்கம் உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், குண்டாறு அணையானது நிரம்பி வழிந்து வருகிறது.

 இந்த நிலையில், கடையம் பகுதியில் உள்ள ராமநதி அணையானது வேகமாக நிரம்பி வரும் நிலையில், அணையில் நீர்மட்டமானது தற்போது 78 அடியாக உள்ளது.

குறிப்பாக, 84 அடி உயரம் கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் தற்போது 78 அடியை எட்டியுள்ள நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து தற்போது நீர் திறந்து விடப்படுகிறது.

 குறிப்பாக, அணை பகுதிக்கு தற்போது 160 கன அடி நீரானது வந்து கொண்டிருக்கும் நிலையில், அப்படியே 160 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

இதனால், கடையம், ரவணசமுத்திரம், பொட்டல்புதூர், பாப்பான்குளம் உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆற்றின் கரையோரத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஆற்றுப் படுகைகள் அருகே செல்ல வேண்டாம் எனவும் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : ராமநதி அணையில் இருந்து 160 கன அடி உபரி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

Share via