விவசாய நிலத்தில் மனமகிழ்மன்றம் என்ற பெயரில் மதுபானக்கூடம் திறக்க முயற்சி.

by Staff / 22-06-2025 10:35:04am
விவசாய நிலத்தில் மனமகிழ்மன்றம் என்ற பெயரில் மதுபானக்கூடம் திறக்க முயற்சி.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த வைரவன் என்ற நபர் செங்கோட்டை பகுதியில் உள்ள திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக உள்ள விவசாய நிலத்தில் கட்டிடங்களை கட்டி, அந்த கட்டிடத்தில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் நவீன மதுபானக் கூடம் திறப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்றைய தினம் புதூர் பேரூராட்சி அதிகாரிகள் அந்த கட்டிடத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும், இது விவசாய நிலம் என்பதால் விவசாய பயன்பாட்டிற்கு மட்டுமே இந்த இடத்தை பயன்படுத்த வேண்டும் என்பதால் இந்த கட்டிடத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் எனக்கூறி நோட்டீஸ் ஒட்டியதோடு மட்டுமல்லாமல், 10 நாட்களில் கட்டிடத்தை அப்புறப்படுத்தவில்லை என்றால், இந்த கட்டிடத்தை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தற்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, கடந்த இரு தினங்களுக்கு முன்பு உயர்நீதிமன்றம் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபான கூடத்திற்கு எப்படி அனுமதி கொடுக்கிறீர்கள்? என்ற கேள்வியை தமிழக அரசிடம் எழுப்பிய நிலையில், தற்போது விவசாய நிலத்தில் கட்டிடங்களை கட்டி மனமகிழ் மன்றம் திறப்பதற்கான முயற்சியில் ஈடுபட்ட நபரின் கட்டிடமானது சீல் வைக்கப்பட்டு அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள சம்பவம் செங்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : விவசாய நிலத்தில் மனமகிழ்மன்றம் என்ற பெயரில் மதுபானக்கூடம் திறக்க முயற்சி.

Share via