கோயில் தற்காலிக ஊழியர்பலி- 6 போலீசார் பணியிடை நீக்கம்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு நேற்று முன்தினம் திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமி (73), என்பவர் தனது மகளுடன் தரிசனம் செய்ய வந்திருந்தார். சிவகாமியால் நடக்க முடியாத நிலையில் கோயில் தற்காலிக ஊழியர் அஜித் (29), வீல்சேர் கொண்டு வந்து கொடுத்துள்ளார். அப்போது கார் சாவியை அஜித்திடம் கொடுத்த பெண்கள் காரை பார்க் செய்யுமாறு கூறியுள்ளனர்.
அஜித்திற்கு கார் ஓட்ட தெரியாததால் அருகில் இருந்தவருடன் காரை பார்க் செய்து சாவியை கொடுத்துள்ளார். இதையடுத்து சாமி தரிசனம் முடிந்து காரில் புறப்பட்ட போது காரின் பின் சீட்டில் கட்டைப்பையின் அடியில் வைத்திருந்த பத்து பவுன் தங்க நகை மாயமாகியுள்ளது. இதனை தொடர்ந்து சிவகாமி அஜித்திடம் விசாரித்த போது உரிய பதில் இல்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து சிவகாமி திருப்புவனம் காவல்துறையில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் அஜித் உள்ளிட்ட சிலரிடம் நேற்று கோயில் அருகே வைத்து விசாரணை செய்துள்ளனர். அப்போது அஜித்திடம் விசாரணை செய்த போது மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது அஜித் உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து அஜித்தின் உடல் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் உயிரிழந்த அஜித்தின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே திருப்புவனம் காவல்நிலையத்தில் பணிபுரிந்த குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் கண்ணன், பிரபு, சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி ஆஷித் ரவத் உத்தரவிட்டதுடன் வெளிப்படையான விசாரனை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
Tags : கோயில் தற்காலிக ஊழியர்பலி- 6 போலீசார் பணியிடை நீக்கம்.