இலங்கை தமிழர்களுக்கு ரேசனில் இலவச அரிசி- சட்டசபையில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

by Admin / 27-08-2021 03:50:17pm
இலங்கை தமிழர்களுக்கு ரேசனில் இலவச அரிசி- சட்டசபையில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.5 கோடி வழங்கப்படும் என்று சட்டசபையில் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற போர் காரணமாக இலங்கை தமிழர்கள் ஏராளமானோர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்தனர்.
 
இலங்கை தமிழர்கள் வசிப்பதற்காக தமிழகத்தில் பல இடங்களில் அகதிகள் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த முகாம்களில் இலங்கையில் இருந்து வந்த அகதிகள் வசித்து வருகிறார்கள். இலங்கை அகதிகள் முகாமில் உள்ள வீடுகள், சாலைகள் சேதம் அடைந்திருப்பதாக ஏற்கனவே பல முறை புகார்கள் வந்தன.

மேலும் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள குழந்தைகள் கல்வி கற்க முடியாமல் திண்டாடினார்கள். எனவே இலங்கை தமிழர்களின் முகாம்களை மேம்படுத்தவும், அவர்களுக்கு நல உதவிகளை வழங்கவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார்.

இதையடுத்து தமிழக சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 110-வது விதியின்கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார். அவர் பேசியதாவது:-

இலங்கை தமிழர்களுக்கு ரே‌ஷன் கடைகளில் விலையில்லா அரிசி வழங்கப்படும்.

ஆண்டுதோறும் இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.5 கோடி வழங்கப்படும். கல்விக்காக ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களின் அகதிகள் முகாம்களில் வீடுகள், சாலைகள் சீரமைக்கப்படும்.

இலங்கை தமிழர்களின் நலனுக்காகவும், முகாம்களை மேம்படுத்துவதற்காகவும் ஆண்டுதோறும் ரூ.6 கோடி என ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

 

Tags :

Share via