அஜித்குமார் வழக்கு சிறப்பு படைக்கு உத்தரவிட்டது யார் ..?

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமார், தனிப்படை காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இரண்டு நாட்களாக மொத்தம் 25 மணிநேரம் விசாரணை நடத்திய மாவட்ட நீதிபதி, 3வது நாளாக நேற்றும் விசாரணையை தொடர்ந்தார். திருப்புவனம் அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை மருத்துவர் கார்த்திகேயன் விசாரணைக்கு ஆஜரானார்.
இதையடுத்து, அஜித்குமாரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆட்டோவின் ஓட்டுநர் அய்யனாரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். இதனிடையே, அஜித்குமார் கொலை வழக்கை நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென அவர் தரப்பு வழக்கறிஞர் கணேசன் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், அஜித்குமார் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட இடத்தில் காவல்துறை வாகனம் நீண்ட நேரமாக நிற்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. இதுதவிர, திருப்புவனம் காவல் நிலையத்திற்கு அஜித்குமாரை அழைத்து சென்றதும், பின்பு அவரை விடுவித்ததும் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவியில் பதிவாகி உள்ளன. நகை காணாமல் புகாரில் அஜித் குமாரை அழைத்து சுமார் 15 நிமிடங்களுக்கு விசாரித்த திருப்புவனம் காவலர்கள் அவரை விடுவித்து விட்டதாகதகவல்கள் வெளியாகியுள்ளன.
திருப்புவனம் காவலர்கள் விசாரித்து அனுப்பிய பிறகு, அன்றிரவே சிறப்பு படை காவலர்கள் அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்று, காவல்நிலையத்தில் வைத்து விசாரிக்காமல், மடப்புரம் கோயில் அருகே வைத்து கடுமையாக தாக்கி விசாரித்துள்ளனர். இதன் மூலம், திருப்புவனம் காவலர்கள் அஜித்குமாரை அனுப்பிய பின்னர், அவரை சட்டவிரோதமாக அழைத்துச் சென்று விசாரிக்க சிறப்பு படைக்கு உத்தரவிட்டது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Tags : அஜித்குமார் வழக்கு சிறப்பு படைக்கு உத்தரவிட்டது யார் ..?