இந்திய ரயில்வேக்கு வருவாய் பல மடங்கு உயர்வு

by Staff / 12-10-2022 12:53:55pm
இந்திய ரயில்வேக்கு வருவாய் பல மடங்கு உயர்வு

இந்திய ரயில்வேக்கு கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் இந்த மாதம் 8ம் தேதி வரை கிடைத்த வருவாய் விவரத்தினை வெளியிட்டுள்ளது. அதன்படி, மொத்தம் சுமார் ரூ.33 ஆயிரத்து 476 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் இந்த வருவாய் ரூ.17 ஆயிரத்து 394 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வருவாய் 92 சதவீதம் உயர்ந்துள்ளது. முன்பதிவு செய்து பயணம் செய்த பயணிகள் எண்ணிக்கையும் கடந்த ஆண்டைவிட 24 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு 34.56 கோடி பேர் முன்பதிவு செய்திருந்த நிலையில், இந்த ஆண்டு 42.89 கோடி பேர் முன்பதிவு செய்துள்ளனர். முன்பதிவு செய்த வகையில் கடந்த ஆண்டு ரூ.16 ஆயிரத்து 307 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த ஆண்டு ரூ.26 ஆயிரத்து 961 கோடி கிடைத்து இருக்கிறது. இது 65 சதவீதம் அதிகம். முன்பதிவு செய்யாத பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்தவரை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 197 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 90.57 கோடி பேர் பயணம் செய்த நிலையில் இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 268.56 கோடியாக உயர்ந்துள்ளது. இதைப்போல முன்பதிவு செய்யாமல் பயணித்தவர்களின் வருவாயும் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டைவிட 6 மடங்கு உயர்வு. கடந்த ஆண்டு ரூ.1,086 கோடி கிடைத்த நிலையில், இந்த ஆண்டு ரூ.6 ஆயிரத்து 515 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

 

Tags :

Share via