நரிக்குறவ சமூக மக்கள் ஆசையோடு போட்ட பாசி மாலையை உடனே கழட்டி கொடுத்த அமைச்சர்.

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். கல்லூரியில் உள்ள கட்டிடங்கள், ஆய்வுக்கூடங்கள், நூலகங்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்த நிலையில் கல்லூரி வளாகங்கள் போதிய அளவு சுத்தமாக இல்லை எனவும், கல்லூரி சுத்தமாக வைத்திருக்கக்கூடிய சூழல்தான் மாணவர்களுக்கு படிப்பதற்கான எண்ணத்தை தூண்டும், இப்படி இருந்தால் மாணவர்கள் எப்படி படிக்கத் தோணும் எனவும் கல்லூரி நிர்வாகத்திடம் எடுத்துக் கூறினார்.
தொடர்ந்து இப்பணிகளை ஒரு மாத காலங்கள் முழுமையாக செய்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும் கண்டிப்புடன் தெரிவித்தார்.தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தபோது,
பராசக்தி கல்லூரியில் போதிய ஆசிரியர்கள் வசதிகள் இல்லை என கூறப்பட்டுள்ளது. மேலும் கல்லூரி முதல்வர் கட்டிட வசதி, மெஸ் வசதி உள்ளிட்டவைகள் வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த பணிகளை போர்கால அடிப்படையில் விரைவாக செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் வல்லக்கோட்டை கோயில் கும்பாபிஷேக நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் கவனக்குறைவால் நடைபெற்று உள்ளது. திமுக அரசு சமூக நீதியை காக்க கூடிய, எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. எனவே இதனை எந்த வகையிலும் பெரிதாக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து குற்றாலம் குற்றாலநாதர் ஆலயத்திலும் சுவாமி தரிசன மேற்கொண்டு பின்னர் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார் அங்கு காலியாக கிடக்கும் இடங்களில் நிரந்தரமாக கடைகள் கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்காக அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார். அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் அமைச்சரிடம் பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர். நரிக்குறவ சமூக மக்கள் அமைச்சரை சூழ்ந்து தங்களுக்கு தென்காசியில் வழங்கப்பட்டுள்ள நிலத்திற்கு செல்ல சாலைவசதி,குடிநீர்வசதி,மின்விளக்கு வசதிகள் இல்லையென கூறியநிலையில் கோரிக்கைகள் அனைத்தும் மாவட்ட ஆட்சியர் மூலம் விரைவில் சீரமைக்கப்படுமென அமைச்சர் தெரிவித்தார். முன்னதாக அந்த மக்கள் அமைச்சருக்கு அணிவித்த 2 பாசி மாலையை உடனடியாக கழட்டி உதவியாளரிடம் வழங்கியது அந்த வேடிக்கைபார்த்துக்கொண்டிருந்த பார்த்த சுற்றுலாப்பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Tags : நரிக்குறவ சமூக மக்கள் ஆசையோடு போட்ட பாசி மாலையை உடனே கழட்டி கொடுத்த அமைச்சர்