நெல்லையப்பர் கோயில் தேரோட்டம்- 13 பவுன் நகை 18 செல்போன்கள், ஒரு பைக் மாயம்-பக்தர்கள் அதிர்ச்சி

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆனி பெருந்திருவிழா தேரோட்டத்தில் பக்தர்களிடமிருந்து அடுத்தடுத்து 13 பவுன் நகைகள், 18 செல்போன்கள், ஒரு பைக் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரசித்தி பெற்ற நெல்லை நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோயிலில் நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது. இதில் நெல்லை மாவட்டம் மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தேரை வடம்பிடித்து இழுக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.இந்த கூட்ட நெரிசலில் தேரை வடம்பிடித்து இழுக்கும் போது பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டத்தில் பலரது தங்க நகைகளை மாயமாகி உள்ளன.இதுகுறித்து நேற்று முன்தினம் மாலை வரை டவுன் போலீஸ் நிலையத்தில் 4 பெண் பக்தர்கள் நகைகள் மாயமானதாக புகார் அளித்துள்ளனர். அதிகபட்சமாக ஒரு பக்தரிடம் இருந்து 5.5 பவுன் நகை மாயமாகி உள்ளது. மொத்தமாக சுமார் 15 பவுன் நகைகள் மாயமானதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் 2 பவுன் நகையை பக்தர் ஒருவர் கீழே கிடந்ததாகக் கூறி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாார். அதை போலீசார் உரியவரிடம் ஒப்படைத்தனர்.
மேலும், தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களிடம் இருந்து 18 செல்போன்களும் மாயமாகி உள்ளதாக புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து போலீசார் சிஎஸ்ஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதவிர ஒரு பைக்கும் காணாமல் போயிருப்பதாக அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சி.சி.டி.வி காட்சிகளை ஆராய்ந்து பக்தர்களின் நகைகள் திருடு போனதாக கண்டறியப்பட்டால் எப்ஐஆர் பதிவு செய்து குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்தின் போது பக்தர்களிடமிருந்து நகைகள் மாயமானதாக 3 வழக்குகள் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘கூட்ட நெரிசலில் பலர் விலையுயர்ந்த நகைகளை அணிந்து வந்து உள்ளனர். கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது நகை பறிப்பு நடந்ததற்கான அறிகுறிகள் தெரியவில்லை. அதனால் கூட்ட நெரிசலில் நகை அறுந்து விழுந்திருக்க வாய்ப்புள்ளது. அந்த நகைகளை யாராவது எடுத்தார்களா அல்லது மர்ம நபர்கள் கைவரிசை காட்டினார்களா என தொடர்ந்து விசாரித்து வருகிறோம்’ என்றனர்.
தேரோட்டத்தின் போது பாதுகாப்பு பணிகளுக்காக 3 ட்ரோன் கேமரா, சிசிடிவி வாகனம் உட்பட 300க்கும் மேற்பட்ட கேமராக்கள் மூலம் போலீசார் ரதவீதிகளை கண்காணித்தனர். இதனால் நகைகள் மாயமானது எப்படி? யார் எடுத்தார்கள்? என்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என போலீசார் தெரிவித்தனர்.
Tags : Nellaiappar Temple Chariot- 13 pounds of jewelry, 18 cell phones, a bike missing-Devotees shocked