திருவாரூர் தியாகராஜர் கோவில் கமலாலய குளத்தில் ஆடிப்பெருக்கு விழா.

by Staff / 03-08-2025 11:07:49am
திருவாரூர் தியாகராஜர் கோவில் கமலாலய குளத்தில் ஆடிப்பெருக்கு விழா.

ஆடிப்பெருக்கு விழா தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் ஆடி 18ஆம் நாள் கொண்டாடப்படும். இது நீர் நிலைகளுக்கு நன்றி தெரிவித்து, பூஜை செய்து வழிபடும் நாளாக உள்ளது. அதேபோன்று ஆடிப்பட்டம் தேடி விதைக்க வேண்டும் என்கிற முதுமொழிக்கேற்ப விவசாயிகள் வழிபாடு நடத்தி சம்பா சாகுபடியை தொடங்கும் நாளாகவும் இது உள்ளது. இன்றைய தினம் சுமங்கலி பெண்கள் தாலிச்சரடு மாற்றிக் கொள்வதற்கான நாளாக மட்டுமே பலரும் கருதுகின்றனர்.ஆனால் ஆடி மாதத்தின் 18-வது நாளில் தமிழகத்தில் உள்ள ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடும்.இந்த நாளில் நதிகளை தங்கள் வீட்டு பெண்ணாக பாவித்து,வரவேற்று, அதனை வழிபடுவது தமிழர்களின் வழக்கம்.

இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் உள்ள நீர் நிலைகளில் அப்பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் ஆடிப்பெருக்கு முன்னிட்டு நீர்நிலைகளுக்கு பூஜை நடத்தி வழிபாடு செய்து வருகின்றனர். அந்த வகையில் திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு சொந்தமான கமலாலய குளத்தில் பெண்கள் ஆடிப்பெருக்கை கொண்டாடி வருகின்றனர். வெற்றிலை பாக்கு தேங்காய் பழம் பச்சரிசி உள்ளிட்டவைகளை வைத்து படைத்து மஞ்சள் நூலை கழுத்து மற்றும் கைகளில் கட்டி ஆடிப்பெருக்கு விழாவை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

குறிப்பாக புதுமண தம்பதிகள் திருமணத்தன்று இருவரும் மாற்றிக்கொண்ட மாலையை குளத்தில் விட்டு இருவரும் தாலிக்கயிறு கட்டிக்கொண்டு காவிரித் தாயை வணங்கி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

 

Tags : திருவாரூர் தியாகராஜர் கோவில் கமலாலய குளத்தில் ஆடிப்பெருக்கு விழா.

Share via

More stories