எஸ்எஸ்ஐ கொலையில் தேடப்பட்ட மணிகண்டன் மற்றொரு எஸ்.ஐ.யை வெட்டி தப்ப முயற்சி-என்கவுண்டர்  

by Staff / 07-08-2025 08:40:15am
எஸ்எஸ்ஐ கொலையில் தேடப்பட்ட மணிகண்டன் மற்றொரு எஸ்.ஐ.யை வெட்டி தப்ப முயற்சி-என்கவுண்டர்  

திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் பகுதியில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு மூர்த்தி என்பவரும், அவரது மகன்கள் தங்கபாண்டியன், மணிகண்டன் ஆகியோரும் தங்கி பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்குள் செவ்வாய் கிழமை இரவு மதுபோதையில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது தந்தை மூர்த்தியை இரண்டு மகன்களும் கடுமையாக தாக்கி, அரிவாளுடன் துரத்தியதாக தெரிகிறது.தகவல் அறிந்து ரோந்து பணியில் இருந்த குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் அங்கு சென்றார். அவர்களை சமாதானம் செய்ய முயன்றபோது, மூவரும் இணைந்து உதவி ஆய்வாளர் சண்முகவேலை வெட்டி கொலை செய்துள்ளனர். சண்முகவேலுடன் வந்த ஓட்டுநரையும் அவர்கள் அரிவாளுடன் துரத்திய நிலையில், தப்பிச் சென்ற அவர் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளார்.இந்த வழக்கில் தந்தை - மகன் நேற்று (ஆக.6) சரணடைந்த நிலையில், மணிகண்டனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், இன்று (ஆக.7) அதிகாலை மணிகண்டனை சிக்கலூர் அருகே ஒப்பாறு ஓடையில் பதுங்கி இருப்பதாக  போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் மணிகண்டன் பிடித்த போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றபோது, சரவணக்குமார் என்ற உதவி ஆய்வாளரை வெட்டி விட்டு தப்ப முயன்றதாகவும், அப்போது தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மணிகண்டனின் உடல், பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

 

Tags : எஸ்எஸ்ஐ கொலையில் தேடப்பட்ட மணிகண்டன் மற்றொரு எஸ்.ஐ.யை வெட்டி தப்ப முயற்சி-என்கவுண்டர்  

Share via