பறவை காய்ச்சல்

கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் ஹரிபாட்டின் பல்வேறு பகுதிகளில் வாத்துகள் இறந்தது பறவைக் காய்ச்சலால்தான் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் வி.ஆர். கிருஷ்ண தேஜா தலைமையில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் இப்பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
போபாலில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹை செக்யூரிட்டி அனிமல் டிசீஸில் சோதனை செய்யப்பட்ட மாதிரிகளில் எச்5என்1 வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. ஹரிபாட் நகராட்சியின் ஒன்பதாம் வார்டில் உள்ள வசுதானம் மேற்கு மற்றும் வசுதானம் வடக்குத் தோட்டங்களில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட இடங்களில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதியில் வாத்துகள் மற்றும் பிற பறவைகளை கொன்று புதைக்கும் பணி அரசு உத்தரவிட்டவுடன் விரைவில் தொடங்கப்படும்.
இதற்காக எட்டு ஆர்.ஆர்.டி. (ரேபிட் ரெஸ்பான்ஸ் டீம்) அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான வசதிகளை செய்து தருமாறு ஹரிபாட் நகராட்சி மற்றும் பள்ளிப்பட்டு கிராம பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 20,471 வாத்துகள் கொல்லப்பட வேண்டும். ஹரிபாட் நகராட்சியில், பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் பறவைகளை இறக்குமதி செய்வதும், கொண்டு செல்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.
இதை முறையாக கண்காணிக்க போலீஸ் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பலப்படுத்த சுகாதாரத்துறைக்கு கலெக்டர் உத்தரவிட்டார். வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதால், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பான சந்தை கடுமையாக பாதிக்கப்படும்.
தற்போதைய நிலவரத்தால் வாத்து விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
Tags :