ஆந்திராவில் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை கடத்தல்

by Admin / 29-08-2021 10:53:31pm
ஆந்திராவில் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை கடத்தல்



   
ஆந்திர மாநிலம் மார்க்காபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் மார்க்காபுரம் அடுத்த மாய வந்துனி தாடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராமுலு. இவரது மனைவி கோமளி. நிறைமாத கர்ப்பிணியான கோமளி கடந்த வாரம் மார்க்காபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். கடந்த 24-ந்தேதி கோமளிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
 
பிறந்த பெண் குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் இருந்தது. இதையடுத்து அங்கிருந்த டாக்டர்கள் கோமளியின் பெண் குழந்தையை இன்குபேட்டரில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் இன்குபேட்டரில் சிகிச்சையில் இருந்த குழந்தை திடீரென காணாமல் போனது.

அதிகாலை நேரம் என்பதால் அங்கிருந்த குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் நர்சுகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். இதனைப் பயன்படுத்தி குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அறிந்த குழந்தையின் பெற்றோர் பதறி அடித்து கொண்டு குழந்தையை ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் தேடினர்.

ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் மார்க்காபுரம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது கருப்பு நிற பர்தா அணிந்த பெண் ஒருவர் குழந்தையை எடுத்துச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையை எடுத்துச் சென்றது யார்? என சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தையை கடத்திச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via