அரசு ஊழியர்கள் கட்டாயம் பணிக்கு வரவேண்டும் - தலைமைச் செயலாளர் எச்சரிக்கை.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்று தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டம் நடத்த உள்ள நிலையில், அனைவரும் கட்டாயம் பணிக்கு வரவேண்டும் என்று தலைமைச் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால், இந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. எதிர்க்கட்சிகள் இதனை சுட்டிக்காட்டி திமுக அரசை விமர்சித்து வருகின்றன. அதேநேரம் வாக்குறுதியை நிறைவேற்றாததால் அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். அரசு ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக விடுமுறை எடுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கும் நிலையில், இன்று அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்று தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.
Tags : அரசு ஊழியர்கள் கட்டாயம் பணிக்கு வரவேண்டும் - தலைமைச் செயலாளர் எச்சரிக்கை.



















