கர்நாடகா முதல்வர் எடியூரப்பா ராஜினாமா:

by Editor / 26-07-2021 03:42:53pm
கர்நாடகா முதல்வர் எடியூரப்பா ராஜினாமா:

பெங்களூரு: கர்நாடகா பாஜவில் உட்கட்சி பூசலால் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையில், முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா ராஜினாமா செய்வதாக இன்று நடந்த பாராட்டு விழாவில் கண்ணீர் விட்டப்படி அறிவித்தார். பிற்பகலில் கவர்னரை சந்தித்து தனது அமைச்சரவை ராஜினாமா கடிதத்தை வழங்க உள்ளார். பாஜ மேலிடம் கொடுத்த அழுத்தத்தால், எடியூரப்பா ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.

கர்நாடகாவில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து, கடந்த 2019 ஜூலை 26ம் தேதி பாஜ ஆட்சி அமைத்தது. எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். இவருக்கு 78 வயதாகி விட்டதால், பாஜ கட்சியில் கொள்கை சித்தாந்தப்படி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று பாஜ எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் மேலிடத்திடம் வலியுறுத்தி வந்தனர். இதனால், எடியூரப்பாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.

இதனால், பதவியேற்கும்போது எடியூரப்பா 2 ஆண்டுகளில் பதவி விலக வேண்டும் என்று கட்சி மேலிடம் நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது. இன்றுடன் எடியூரப்பா பதவியேற்று 2 ஆண்டுகள் முடிவடைகிறது. இதையொட்டி, கடந்த சில வாரங்களாகவே எடியூரப்பாவுக்கு எதிராக கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் முதல்வர் எடியூரப்பா பதவி விலகக்கோரி போர்க்கொடி தூக்கினர்.

இதையடுத்து, கட்சி மேலிடம் அழைப்பின்பேரில் கடந்த 16ம் தேதி டெல்லி சென்ற எடியூரப்பா, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். அப்போது, மேலிடம் கொடுத்த அழுத்தத்தால் உடல்நிலை காரணம் காட்டி அவர் ராஜினாமா கடிதத்தை நட்டாவிடம் கொடுத்ததாக தகவல்கள் வெளியானது. சந்திப்புக்கு பின் பேட்டியளித்த எடியூரப்பா, 'கட்சி மேலிடம் கேட்டுக்கொண்டால் பதவியை ராஜினாமா செய்வேன்' என்று அறிவித்தார்.

 

Tags :

Share via