மதுரை தீபாவளி பண்டிகை இனிப்புகள், பலகார விற்பனை-மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் எச்சரிக்கை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்புகள், பலகார விற்பனையில் உணவுபாதுகாப்பு விதிமுறைகளை மீறினால் சட்ட ரீதியான கடும் நடவடிக்கை பாயும் - மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இனிப்பு மற்றும் பண்டங்களுக்கு சீட்டு நடத்துபவர்கள், தற்காலிக ஸ்வீட் ஸ்டால்களில் உள்ளிட்ட அனைத்து உணவுப்பொருட்களில் சுகாதாரமற்ற முறையில் தயாரிப்புகளில் ஈடுபட்டால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் ரகசியம் பாதுகாக்கப்படும் எனதகவல்,
தீபாவளி பண்டிகை நெருங்கிய நிலையில் இனிப்பு மற்றும் கார உணவுப் பொருட்களின் விற்பனை தொடங்கியுள்ளது. இந்நிலையில் உணவுப்பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பான முறையில் தயாரித்து விற்பனை செய்வது குறித்து மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரவீன் குமார் வணிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் விற்பனையாளர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் இனிப்பு மற்றும் கார உணவுப் பொருட்களை தரம் மற்றும் பாதுகாப்பான முறையில் தயாரிப்பதில் உணவுப்பாதுகாப்புத்துறையின் விதிகளை மீறினால் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும்,
இனிப்பு மற்றும் பண்டங்களுக்கு சீட்டு நடத்துபவர்கள், தற்காலிக ஸ்வீட் ஸ்டால்கள் உட்பட அனைத்து இனிப்பு மற்றும் கார வகை தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்பு துறையில் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்ற பின்னரே பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். எனவும்,
அனைத்து வகையான உணவு வணிகர்களும் தங்களது வணிக நிறுவனத்தினை foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்று கொள்ள வேண்டும்
பலகாரப் பொருட்களைத் தயாரிப்பவர்கள், உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற தரமான மூலப்பொருட்களைக் கொண்டு, ஈக்கள் மொய்க்காத மற்றும் அசுத்தம் இல்லாத சுகாதாரமான சூழலில் அவற்றைத் தயாரிக்க வேண்டும்,
அனுமதிக்கப்படாத செயற்கை நிறமிகளை பலகாரத்தில் சேர்க்கக்கூடாது. மேலும் சில உணவுப் பொருட்களுக்கு அனுமதிக்கப்பட்ட நிறமிகளைக்கூட அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே பயன்படுத்திட வேண்டும்.
சமையல் எண்ணெயை ஒருமுறை மட்டுமே பயன்படுத்திடல் வேண்டும். பயன்படுத்தி மீதமான ஆறிய நிலையில் உள்ள எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக்கூடாது.
பலகாரங்களை பேக்கிங் செய்தாலும், கிப்ட் பாக்ஸாக தயாரித்தாலும், அதன் தயாரிப்பு நாள், காலாவதி நாள், உணவு பாதுகாப்பு உரிமம் எண் உள்ளிட்ட லேபிள் விபரங்களை அவசியம் அச்சிடுதல் வேண்டும்.
தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் அனுமதியற்ற பிளாஸ்டிக்குகளை பயன்படுத்தக்கூடாது எனவும் உணவு பாதுகாப்பு துறையில் பதிவு பெற்ற கடைகளில் மட்டும் பலகாரங்களை வாங்குமாறும், விபரச்சீட்டு உள்ள பலகாரங்களை மட்டும் வாங்கி நுகர்வோர்கள் உபயோகிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் பலகாரங்களின் தரம் குறைபாடு அல்லது சுகாதாரமற்ற கடைகள் குறித்து நுகர்வோர்கள் புகார் தெரிவிக்க விரும்பினால், 0452-2640036 என்ற மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தின் எண்ணிற்கு அழைத்தோ அல்லது 94440-42322 என்ற மாநில உணவு பாதுகாப்பு துறை, ஆணையர் அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலமாகவோ புகார் தெரிவிக்கலாம் எனவும், புகார் அளிக்கும் பொதுமக்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags : மதுரை தீபாவளி பண்டிகை இனிப்புகள், பலகார விற்பனை-மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் எச்சரிக்கை