சாலையில் சிதறிக் கிடந்த ரூ.3.50 லட்சம்.. அள்ளிச் சென்ற மக்கள்
தஞ்சாவூர் – கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் பாபநாசம் திருப்பாலத்துறை மெயின்ரோட்டில் பகுதியில் நடுரோட்டில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் சிதறி கிடந்துள்ளன. அவரை பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிலர் பணத்தை போட்டி போட்டு எடுத்துள்ளனர்.
அப்போது அந்த வழியாக குடும்பத்துடன் டாட்டா ஏசி வாகனத்தில் வந்துகொண்டிருந்த திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் கண்ணன் என்பவர் உடனடியாக வானத்திலிருந்து இறங்கி பணத்தை சாலையிலிருந்து எடுத்துக்கொண்டிருந்த நபர்களிடம் விசாரித்தபோது இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் பணத்தை கீழே போட்டுவிட்டு சென்று விட்டதாகவும் கிடைத்தவரை லாபம் என எடுத்துக் கொண்டு இருப்பதாக கூறியுள்ளனர்.
இந்த பணத்தை போலீசில் ஒப்படைக்க வேண்டும் என கண்ணன் தெரிவித்ததை தொடர்ந்து பணத்தை எடுத்த ஒரு சிலர் வாகனத்தில் வேகமாக ஓடி விட்டனர். பின்னர் தப்பி ஓட முயன்ற நபர்களிடம் இருந்து தனது குடும்பத்தினர் உதவியுடன் பணத்தை மீட்ட கண்ணன் சாலையில் சிதறிக் கிடந்த 500 ரூபாய் நோட்டுகளை மீட்டார். அதில் ரூ.3 லட்சத்து 19 ஆயிரத்து 500 இருந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து அந்த பணத்தை பாபநாசம் போலீஸ் நிலையத்தில் கண்ணன் ஒப்படைத்தார். இன்ஸ்பெக்டர் அழகம்மாள் பணத்தை எடுத்து வந்த கண்ணனை பாராட்டியதோடு அந்த பணம் யாருடையது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டார்.
இந்நிலையில் பணம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட சில மணி நேரத்தில் பதறியடித்துக்கொண்டு போலீஸ் நிலையத்திற்கு வந்த கும்பகோணம் கருணைக்கொல்லை வடக்கு தெருவைச் சேர்ந்த சூர்யா (வயது 20) என்பவர் சாலையில் கிடந்த ரூ.500 நோட்டுகள் தன்னுடையதுதான் என கூறியுள்ளார்.
இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் கும்பகோணத்தில் வீட்டு பத்திரத்தை அடகு வைத்து ரூ.3 1/2லட்சம் ரொக்கப் பணம் நிதி நிறுவனத்தில் பெற்றதாகவும், அந்த பணத்தை ஒரு மஞ்ச பையில் எடுத்துக்கொண்டு கும்பகோணத்தில் இருந்து பாபநாசத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்து போது சாலையில் தவறி விழுந்து விட்டதாகவும், பணப்பை கீழே விழுந்ததை அறிந்து நான் வந்த பாதை முழுவதும் தேடி அலைந்ததாகவும் அப்போது திருப்பாலத்துறை மெயின் ரோட்டில் கிடந்த தன்னுடைய பணத்தை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் தகவல் கிடைத்தது தொடர்ந்து இங்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பின்னர் அவரிடம் பணத்துக்கான ஆவணங்களை எடுத்து வரும்படி கூறி அதனை ஆய்வு செய்த அவர் சூர்யாவையும் பணத்தை மீட்டுக் கொண்டு வந்த அரசுப் பேருந்து ஓட்டுனர் கண்ணன் ஆகியோரை தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா காந்தபுனேனியிடம் அழைத்துச் சென்றார்.
பணத்தை பறிகொடுத்த சூர்யாவிடம் போலீஸ் சூப்பிரண்டு விசாரணை மேற்கொண்டு பணம் சூர்யாவுடையதுதான் என பூர்த்தி செய்யப்பட்ட அவரிடம் பணத்தை ஒப்படைத்தார். மேலும் தன்னுடைய பணம் 30 ஆயிரத்து 500 எடுத்துச் சென்ற நபர்களை கண்டுபிடித்து பணத்தை மீட்டுக் கொடுக்கும்படி புகார் அளித்தார்.
Tags :



















