மதுரை கோட்டத்தில் ஒரே மாதத்தில் ரயில் படிக்கட்டுகளில் பயணம் செய்த 8 பேர் பலி 6 பேர் காயம் 

by Editor / 08-07-2024 11:27:01pm
மதுரை கோட்டத்தில் ஒரே மாதத்தில் ரயில் படிக்கட்டுகளில் பயணம் செய்த 8 பேர் பலி 6 பேர் காயம் 

மதுரை கோட்டத்தில் ஜூன் மாதத்தில் மட்டும் ரயில் படிக்கட்டுகளில் பயணம் செய்த பயணிகளில்  8 பேர் பலியாயினர்.  6 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்றனர். இந்த ஆண்டில் கடந்த ஆறு மாதங்களில் ரயில் படிக்கட்டில் பயணம் செய்த 23 பேர் மரணம் அடைந்தனர். 17 பேர் காயம் அடைந்தனர். கடந்த ஆண்டு ரயில் படிக்கட்டுகளில் பயணம் செய்து ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்து 41 பேர் மரணம் அடைந்தனர். 43 பேர் காயமடைந்தனர். ரயில் நிலையங்களில்,'படிக்கட்டில் பயணம் செய்ய வேண்டாம்' என விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. பொது அறிவிப்புகள் மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இருந்த போதிலும் பயணிகள் படிக்கட்டுகளில் நின்று கொண்டும், உட்கார்ந்து கொண்டும் பயணம் செய்வது தொடர்கதையாக உள்ளது. இந்த விபத்துக்கள் பெரும்பாலும் நள்ளிரவு முதல் அதிகாலை நேரங்களில் நடைபெறுகிறது. படிக்கட்டில் பயணம் செய்யும் பயணிகள் தூக்க கலக்கத்தில் கீழே விழுவது அதிகரித்து வருகிறது. ரயில் படிக்கட்டுகளில் அமர்ந்து பயணம் செய்பவர்களது கால்கள் ரயில் நிலைய நடைமுறைகளில் மோதியும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. படிக்கட்டு பயணத்தால் அதிகபட்சமாக விருதுநகர் - வாஞ்சி மணியாச்சி இடையே 66 பேரும், மதுரை - திண்டுக்கல் இடையே 44 பேரும், விருதுநகர் - செங்கோட்டை இடையே 43 பேரும் பாதிப்படைந்துள்ளனர். பெரும்பாலும் பாதிப்படைந்த வர்கள் 25 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களாக உள்ளனர். பாதிப்படைந்தவர்களில் 87 சதவீதம் ஆண்களும் 13 சதவீதம் பெண்களும் உள்ளனர். படிக்கட்டு பயணத்தை தடுக்க ரயில்வே பாதுகாப்பு படையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு படிக்கட்டில் பயணம் செய்த 22 பேர் மீது வழக்கு பதிவு செய்து ரூபாய் 10,100 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூபாய் 11,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ரயிலில் பாதுகாப்பிற்காக பயணம் செய்யும் ரயில்வே பாதுகாப்பு படையினர் படியில் நின்று கொண்டும், செல்போன் மூலம் படம் எடுத்துக் கொண்டும், மற்ற பயணிகளுக்கு இடையூராக இருப்போர் மீது நடவடிக்கை எடுத்து ரயில் பெட்டி கதவுகள் மூடப்பட்டிருக்கும் நிலையை உறுதி செய்கிறார்கள். ரயில் பாதையில் உள்ள மின்மய மின்சார கம்பத்தில் தூரம் கணக்கிடும் வகையில் எண்கள் குறிக்கப்பட்டு இருக்கின்றன. உதாரணமாக மதுரைக்கும் சென்னைக்கும் இடையே 493 கிலோமீட்டர் என்று குறிப்பிடும் வகையில் சோழவந்தானுக்கு பிறகு ஒவ்வொரு நூறு மீட்டருக்கும் 471/000, 471/100, 471/200... என தொடர்ச்சியாக குறிப்பிடப்பட்டிருக்கும். தவறுதலாக யாராவது ரயிலில் இருந்து விழுந்து விட்டால் அதன் அருகில் உள்ள மின்சார கம்பத்தில் எழுதப்பட்டிருக்கும் எண்ணை குறிப்பிட்டு "ரயில் மதாத்" செயலியில் புகார் செய்தால், பாதிக்கப்பட்டவரை விரைவில் மீட்டு காப்பாற்ற முடியும்.

 

Tags : மதுரை கோட்டத்தில் ஒரே மாதத்தில் ரயில் படிக்கட்டுகளில் பயணம் செய்த 8 பேர் பலி 6 பேர் காயம் 

Share via