கேரளாவில் இருந்து கோவைக்கு மாணவர்கள் தினமும் வந்து செல்ல அனுமதியில்லை

by Admin / 31-08-2021 04:30:36pm
கேரளாவில் இருந்து கோவைக்கு மாணவர்கள் தினமும் வந்து செல்ல அனுமதியில்லை


கோவை மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து துணிக்கடைகள், நகைக்கடைகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.


கோவை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் தற்போது தான் படிப்படியாக குறைந்து வருகிறது. இதன்காரணமாக கடந்த ஒரு வாரமாக தான் கடைகள் இரவு 10 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.
 
இந்தநிலையில் கோவையை ஒட்டியுள்ள கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அங்கு தினமும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் தாக்கம் கோவையிலும் ஏற்பட்டு விடாமல் இருப்பதற்காக மாவட்ட நிர்வாகம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

மேலும் நாளை (1-ந் தேதி) முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. இதன் காரணமாக கோவை மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கேரளாவில் இருந்து மாணவ-மாணவிகள் தினமும் வந்து செல்ல அனுமதியில்லை. அங்கிருந்து வரும் மாணவ-மாணவிகள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். மேலும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கொண்டு வர வேண்டும், இதனை அந்தந்த கல்வி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகள் மற்றும் வேலைக்கு செல்வோருக்கான விடுதிகள் ஆகியவற்றில் தங்குபவர்கள் மற்றும் பணிபுரிபவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.

கோவை மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து துணிக்கடைகள், நகைக்கடைகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் அனைத்து பூங்காக்கள் மற்றும் மால்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

மக்கள் அதிகம் கூடும் இடங்களான கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட இடங்களில் இயங்கும் பால், மருந்தகம், காய்கறி கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

மேலும் கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் வருமாறு:-

மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்கள் மற்றும் பேக்கரி கடைகள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.

கோவை மார்க்கெட்டுகளில் மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. 50 சதவீத கடைகள் சுழற்சி முறையில் இயங்க அனுமதிக்கப்படும். உழவர் சந்தைகள் 50 சதவீத கடைகளுடன் இயங்கும்.

அனைத்து வார சந்தைகளும் இயங்க தடை விதிக்கப்படுகிறது. பொள்ளாச்சி மாட்டு சந்தையும் இயங்க தற்காலிகமாக தடை விதிக்கப்படுகிறது.

திருமணம் மற்றும் இதர நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள வேண்டும். திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு 10 நாட்களுக்கு முன் சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் அனுமதி பெற வேண்டும்.

 

Tags :

Share via