இந்திய அணியை முந்திய இங்கிலாந்து

by Editor / 03-09-2021 09:12:51pm
இந்திய அணியை முந்திய இங்கிலாந்து

ஓவல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணியை இங்கிலாந்து அணி முந்தியது.

ஓவலில் நேற்று தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு வழக்கம் போல தொடக்கம் சரியாக அமையவில்லை. ரோகித் சர்மா 11 ரன்னுடனும், ராகுல் 17 ரன்னுடனும், புஜாரா 4 ரன்னுடனும் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தனர். இதனால் 40 ரன்கள் எடுப்பதற்கு முன்னதாகவே இந்திய அணி 3 முக்கிய விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

இதைத் தொடர்ந்து, கேப்டன் கோலி அரைசதம் விளாசி ஆட்டமிழந்தார். இதனால், இந்திய அணி குறைந்த ரன்களில் சுருண்டு விடும் என்ற அச்சம் உருவானது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் ஷர்துல் தாகூர் அதிரடி காட்டினார். ஓவல் டெஸ்ட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அரைசதம் விளாசியவர் என்ற பெருமையை அவர் பெற்றார். ஷர்துல் தாகூர் 36 பந்துகளில் 57 ரன்கள் விளாசினார். இதனால், இந்தியா அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இங்கிலாந்து அணி தரப்பில் வோக்ஸ் 4 விக்கெட்டுக்களும், ராபின்சன் 3 விக்கெட்டுக்களும், ஓவர்டன், ஆன்டர்சன் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 4வது ஓவரில் தொடக்க வீரர்களின் விக்கெட்டை இழந்து தடுமாறியது. பின்னர், கேப்டன் ரூட் 21 ரன்னில் அவுட்டானார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 54 ரன்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்தது.

இந்த நிலையில், 2வது நாள் ஆட்டம் தொடங்கியதும் ஓவர்டன் (1), மலன் (31) ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால், அந்த அணி 62 ரன்னுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. இதைத் தொடர்ந்து, ஜோடி சேர்ந்த போப் மற்றும் பேர்ஸ்டோவ் இணை நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. இதனால், இங்கிலாந்து அணி கவுரவமான நிலையை எட்டியது. இதைத் தொடர்ந்து பேர்ஸ்டோவ் 37 ரன்னுக்கும், மொயின் அலி 35 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர்.

மறுமுனையில் நிதான ஆடி வரும் போப் அரைசதம் கடந்து அணியை நல்ல நிலைக்கு அழைத்து செல்கிறார். தற்போது நிலவரப்படி இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் சேர்த்துள்ளது

 

Tags :

Share via