தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ள இன்னும் ஒரு வார காலம் காத்திருக்க வேண்டிய நிலை.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ள இன்னும் ஒரு வார காலம் காத்திருக்க வேண்டிய நிலை. அதிக வாக்குப்பதிவின் காரணமாக, எந்த கட்சி ஆட்சிக்கு வரும் என்று உறுதியாக சொல்ல முடியாமல் அரசியல் நோக்கர்கள் திணறி வருகிறார்கள். பல்வேறு தொலைக்காட்சி ஊடகங்களிலும் விவாதங்களும் கருத்துக்கணிப்புகளும் வெளி வந்து கொண்டிருக்கின்றன.
சமூக ஊடகத்தின் ஆதிக்கத்தின் காரணமாக பத்திரிக்கை துறை சாராத தனிநபர்களும் தங்கள் கருத்துக்களை கணிப்புக்களாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்..
எந்த மாதிரியான முடிவு அமையப்போகிறது . யாராலும் அறுதியிட்டு சொல்ல முடியவில்லை. ஒரு குழப்பமான சூழல் நிலவிக் கொண்டிருக்கிறது. வாக்கு சதவீதம் அதிகரித்து இருந்தாலும் முந்தைய தேர்தல் ,அதற்கு முந்தைய தேர்தல் என புள்ளி விவரங்களை சொல்லி, 20 லட்சம் வாக்குகள் மட்டுமே அதிகரித்து இருப்பதாகவும் இது இந்த கட்சிக்கு முழுமையாக விழுந்திருந்தாலும் கூட, மிகப் பெரிய ஒரு வெற்றியை தராது என்றும் ஏற்கனவே இருக்கின்ற பெரும் கட்சிகள் அதற்குரிய வாக்கு வங்கிகளை தொடர்ச்சியாக வைத்திருப்பதனால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்ற ஒரு கருத்தும் வாதிடப்படுகின்றது..
புதிய வரவு கட்சிக்கு மக்கள் பெருத்த ஆதரவையும் ஆளுகின்ற கட்சிக்கு எதிர்ப்பையும் தெரிவிக்கின்ற மாதிரியான சூழல் தான் இப்போதைய அதிக வாக்குப்பதிவு என்கிற கருத்தாக்களும் வெளிவருகின்றன.
அதனால், இந்தத் தேர்தலை பொருத்தவரை ஒரு மவுனப் புரட்சி என்று தான் சொல்ல வேண்டும். புதிய வரவுகளை முழுமையாக மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்களா ...இல்லை, தொடர்ந்து மக்கள் பணியில் இருக்கின்ற பெரும் கட்சிகள் தொடர்ந்து தங்கள் செல்வாக்கை நிலை நிறுத்தப் போகின்றனவா என்கிற மாதிரியான எண்ண போக்குகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தை ஆண்ட கட்சிகள் அவரவர்கள் காலகட்டத்தில் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தாமல் இல்லை.
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான வளர்ச்சியை தான் இந்த தமிழ் சமூகம் -தமிழ் நிலம் கண்டு இருக்கிறது. 75 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நிலைமை இன்றைக்கு இல்லை. அதனால் ஆண்ட கட்சிகள் எதுவும் இந்த மக்களுக்கு செய்யவில்லை என்று சொல்வதற்கு இல்லை. சாலைப் போக்குவரத்திலிருந்து, பள்ளி படிப்பு, கல்லூரி படிப்பு, வேலை வாய்ப்பு என சமூக தரத்தில் அடித்தட்டிலிருந்த மக்கள் வாழ்க்கை போக்கிலும் மாற்றங்களை கண்டு இருக்கிறார்கள்.
பள்ளி படிப்பும் கல்லூரி படிப்பும் தமிழர்களை உலக அளவில் எந்தெந்த நாட்டிற்கோ முக்கியமான முகங்களாக மாற்றி இருக்கின்றன. அதற்கெல்லாம் ஆண்ட கட்சிகளின் ஆளுமையின் வெளிப்பாடுதான். அதனால் யாரும் எந்த கட்சியையும் எதையும் செய்யவில்லை என்று சொல்லிவிட முடியாது. ஆரோக்கியமான பல்வேறு நலத் திட்டங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அதன் வழியாக, சமூகம் முன்னேறிக் கொண்டுதான் இருக்கின்றன. மேடையில் பேசுகின்ற பேச்சுக்கள் வேண்டுமானால் ,குற்றம் சுமத்துவதாக இருக்கலாம். ஆனால்,
உண்மையில் தி.மு.க ஆனாலும் அ. தி.மு.க ஆனாலும் அவர் அவர்களுடைய ஆட்சி காலத்தில், பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்து இருக்கிறார்கள். இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இரட்டை ஆட்சி முறையிருந்த காலகட்டத்திலிருந்து திராவிட சமூகம்- தமிழ்ச் சமூகம் பல்வேறு வளர்ச்சியை கண்டிருப்பது நிதர்சனம். காலப்போக்குதான், ஒவ்வொரு மாறுதல்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.
சட்டத்தின் வழி, ஜனநாயக தர்மம் தொடர்ந்து வலுப்பெற்று தான் வந்து கொண்டிருக்கின்றது.. இன்றைக்கு பேசுகிற அத்தனை பேர்களுக்கும், உரிமை கொடுத்ததும் ஆண்ட, ஆண்டு கொண்டிருக்கின்ற கட்சிகளின் ஆளுமையால் வந்தவை என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
வறுமையும் பற்றாக்குறையும் மண்டிக்கிடந்த தமிழகச் சூழலில், மாற்றங்கள் வலுவாக நிகழ்ந்திருக்கின்றன. வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது என பாராளுமன்றத்தில் ஒலித்த குரல்கள் எல்லாம் பொய்யாக்கப்பட்டு, தெற்கு வளர்ந்து கொண்டு இருக்கிறது. இன்னும் வளரும்.
வடக்கிலிருப்பவர்களும் இங்கே வந்து வாழ்ந்து தங்களை உயர்த்தி கொள்ளலாம் என்று இருகரம் கூப்பி தமிழகம் வளத்தைவரவேற்றுக் கொண்டிருக்கிறது. தமிழர்கள் உலகத்தின் எல்லா முகங்களிலும் ஒரு முகமாக இருந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு 1917க்கு பின்னர் நிகழ்ந்த மாற்றங்களை நாம் முழுமையாக கவனிக்க வேண்டும்.
இவர் காலகட்டம் தான் சிறப்பாக இருந்தது என்று சொல்வதற்கு இல்லை. எல்லோருடைய ஆட்சியிலும் ஒரு சிறப்பான திட்டங்களோடு நகர்ந்து கொண்டு தான் இருக்கின்றது. மக்கள் தொகை, வாழ்வாதார சூழல்கள் எல்லாவற்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்
வீட்டுக்கு ஒருவர் கூட பட்டதாரி இல்லை என்கிற நிலை மாறி, வீட்டுக்கு ஒருவர் பொறியியல் படிப்பும் அதற்கு மேல் படித்தவர்களாகவும் குறைந்த பட்சம், ஒரு வீட்டிற்குள் 50 ஆயிரம் ரூபாய்க்கு படித்த ஒரு பையனால் வீட்டிற்குவருமானம் பெறுகிறநிலையையும் நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம்.
உலகத்தில் வளர்ந்த நாடுகளில் இருக்கின்ற அத்தனை வசதிகளையும் தமிழகத்தின் கடைக்கோடி குடும்பம் கூட அனுபவித்துக் கொண்டிருக்கிறது நாம் மறந்து விடுவதற்கு இல்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, ஆண்ட எந்த கட்சியும் எதையும் செய்யவில்லை என்று சொல்லிவிட முடியாது. வரலாறு வலிமையானது. அதை எவராலும் மாற்ற முடியாது .மறைக்கவும் முடியாது.
பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியாத நிலையில் இருந்தவர்கள் இன்று வீட்டிற்குள்ளேயே தண்ணீரைப் பிடித்து தன் தேவைகளை பூர்த்தி செய்கின்ற நிலையும் செருப்பு போட்டு தெருவில் நடக்க முடியாதவர்கள் இன்றைக்கு செருப்பே போடாதவர்களே கிடையாது என்கிற நிலையும் உருவாகி உள்ளது. நாம் மறந்து விட முடியாது. இதற்கெல்லாம் முந்தைய ஆட்சியாளர்களின் திட்டங்களும் சட்டங்களும் தான் காரணமாக அமைந்திருந்தன.
பெரும் பஞ்சங்களையும் பெரும் கொள்ளை நோய்களையும் நாம் வென்றிருக்கின்றோம். இதை மட்டும் தான் நான் செய்தேன் என்று எதையும் யாரும் சொல்லி மார்தட்டி விட முடியாது. ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்களினுடைய வாழ்வியலை பாதுகாத்து இருக்கிறது ஆண்ட ஒவ்வொரு அரசும்... அதனால், எதையும் நாம் எளிதாக கடந்து போய் விட முடியாது.. ஒரு பாறையை உடைக்க 99 அடிகளை நமக்கு முன்னாலே இருந்த ஆட்சியாளர்கள் தான் செய்திருக்கிறார்கள். நூறாவது அடியில் அடிக்கின்ற ஒர் அடியில் பாறை உடைந்தது என்றால், அதை வெற்றி என்று நாம் மார்தட்டி பெருமைப்படுவதற்கு ஒன்றுமில்லை..
காலங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன.. காட்சிகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன.
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு தான் நாம் நகர்ந்து கொண்டிருக்கின்றோம்.
Tags :



















