4 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் உதகை மலைரயில் சேவை

by Editor / 06-09-2021 09:59:00am
4 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும்  உதகை மலைரயில் சேவை

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ரத்து செய்யப்பட்டிருந்த மலைரயில் போக்குவரத்து நான்கு மாதங்களுக்குப் பின்னர் இன்று முதல் துவங்கியது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை செல்லும் நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலைரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினசரி இயக்கப்பட்டு வருகிறது. உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த மலை ரயிலில் பயணித்து நீலகிரி மலையின் இயற்கை எழிலை கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.

இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ரத்து செய்யப்பட்டிருந்த இந்த மலைரயில் சேவை, நான்கு மாத முடக்கத்திற்கு பின்னர் இன்று முதல் மீண்டும் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதன்படி, இன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரையிலான நீலகிரி மலைரயில் போக்குவரத்து திட்டமிட்டபடி துவங்கியது.

வழக்கம் போல் காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை நோக்கி புறப்பட்ட மலைரயிலில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் மேற்கொண்டனர்.

 

Tags :

Share via