அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 1 முதல் அகவிலைப்படி உயர்வு-முதல்வர் மு.க ஸ்டாலின்
அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வு 1.1.2022 முதல் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். அகவிலைப்படி அமல்படுத்தப்படுவதால் 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பயன்பெறுவார்கள் என்று அறிவித்துள்ளார்.நாட்டின் விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு ஆறு மாத காலத்துக்கு ஒருமுறை அகவிலைப்படி (பஞ்சப்படி)யை அரசு ஊழியர்களுக்கு அரசுகள் உயர்த்திக் கொடுக்கும். கடந்த ஆண்டு 2020இல் கொரோனா வைரஸ் தொற்று பரவலால் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய அகவிலைப்படி 2021 ஜூலை மாதம் 1ஆம் தேதி வழங்கப்படும் என்றார் பிரதமர் நரேந்திர மோடி, அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு வழங்கிவிட்டார்.அதேபோல தமிழக அரசு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வழங்கவேண்டிய 11% சதவீதம் அகவிலைப்படியை இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல்வர் ஸ்டாலின் வழங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் 2022 ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி வழங்குவதாக நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அரசு ஊழியர்களை சமாதானப்படுத்தும் வகையில் முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் இன்று மிக முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் இன்று அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் மு.க ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வு 1.1.2022 முதல் வழங்கப்படும். அகவிலைப்படி அமல்படுத்தப்படுவதால் 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பயன்பெறுவார்கள் என்று அறிவித்துள்ளார்.அரசுப் பணிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பணியாளர்களுக்கு கூடுதல் கல்வித்தகுதிக்கான ஊக்கத் தொகை விரைவில் அறிவிக்கப்படும். ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணியமர்த்தப்படும் முறை ஒழிக்கப்படும். சத்துணவு சமையல் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 60 ஆக உயர்த்தப்படுகிறது என அறிவித்துள்ளார். கொரோனா காரணமாக அரசு ஊழியர்கள், ஆசிரியருக்கான அகவிலைப்படி உயர்வு கடந்த 2020 ஏப்ரலில் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நிதிநிலை அறிக்கையில் ஏப்ரல் முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஜனவரியிலேயே அகவிலைப்படி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
Tags :