வீடியோவில்.. உயிரிழந்ததாக கருதப்பட்ட அல்கொய்தா தலைவர்

by Editor / 12-09-2021 05:03:23pm
வீடியோவில்.. உயிரிழந்ததாக கருதப்பட்ட அல்கொய்தா தலைவர்

இரட்டை கோபுர தாக்குதலின் 20ஆவது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில், அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட அய்மான் அல்-ஜவாஹிரி பேசுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இரட்டை கோபுர தாக்குதல் நடந்த செப்டம்பர் 11, அமெரிக்க வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத ஒரு கறுப்பு நாள். விமானங்களைக் கடத்திய பயங்கரவாதிகள் இரட்டை கோபுரம், பென்டகனில் மோதினர்,

இதில் கொடூர தாக்குதலில் மொத்தம் 2997 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்குப் பின்னரே ஆப்கனில் உள்ள பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா போர் தொடுத்தது.அனைத்து அமெரிக்கர்களின் நெஞ்சிலும் ஆழமாகப் பதிந்த இந்த தாக்குதலின் 20ஆம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் பைடன், இந்தத் தாக்குதலில் உயிரிழந்தோரின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அன்று களத்தில் போராடியவர்களை நினைத்து அமெரிக்கா பெருமிதம் கொள்வதாகவும் வெறும் 102 நிமிடங்களில் 2997 பேரது கனவு சிதைந்துவிட்டதாகவும் அதிபர் பைடன் குறிப்பிட்டார்.அதேநேரம் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பும் இரட்டை கோபுர தாக்குதல் தொடர்பாக நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டது. சுமார் 60 நிமிடங்கள் நீளமுள்ள "Jerusalem will not be Judaised' என்ற இந்த வீடியோவை அல்கொய்தா பயங்கரவாதிகள் டெலிகிராம் தளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவை பார்த்தவர்களுக்கு மிகப் பெரிய ஷாக் காத்திருந்தது. ஏனென்றால் இதில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரி இரட்டை கோபுர தாக்குதல் தொடர்பாகப் பேசும் காட்சிகள் இருந்தன.எகிப்து நாட்டை சேர்ந்த பயங்கரவாதி தான் அய்மான் அல்-ஜவாஹிரி. கடந்த 2011ஆம் ஆண்டு அல்கொய்தா பயங்கரவாத அமைப்பைத் தோற்றுவித்த ஒசாமா பின்லேடன் அமெரிக்க சீல் படையினரால் பாகிஸ்தானில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் பிறகு அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவராக அறிவிக்கப்பட்டவர் தான் இந்த அய்மான் அல்-ஜவாஹிரி. அல்கொய்தா நடத்திப் பல தாக்குதல்களில் மூளையாகச் செயல்பட்டவர் அய்மான் அல்-ஜவாஹிரி.இவர் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது. அதன் பிறகு இவரைப் பற்றி எந்தவொரு வீடியோ அல்லது தகவல்கள் வெளியாகவில்லை. இதனால் அய்மான் அல்-ஜவாஹிரி உயிரிழந்ததாகவே பலரும் கருதினர். இந்தச் சூழலில் தான் அய்மான் அல்-ஜவாஹிரிவின் காட்சிகள் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. இதில் அவர் பூரண உடல்நலத்துடன் இருப்பதாகவே தெரிகிறது.

 

Tags :

Share via