கே.ஆர்.பி., அணையில் 1,423 கன அடி நீர் திறப்பு

by Editor / 08-10-2021 10:15:37am
கே.ஆர்.பி., அணையில் 1,423 கன அடி நீர் திறப்பு

கே.ஆர்.பி., அணையில், 1,423 கன அடி நீர் திறப்பால், தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி செல்லும் நீரால், அணைக்கு வர பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் பரவலாக மழையால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை, 7:00 மணிக்கு வினாடிக்கு, 913 கன அடியாக இருந்த நீர்வரத்து, மதியம், 2:00 மணிக்கு, 1,600 கன அடியாக அதிகரித்தது. அணை நீர்மட்டம், 51 அடியை எட்டியுள்ளதாலும், வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்தும், அணைக்கு வந்து கொண்டிருந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது.

அதன்படி, அணையிலிருந்து முதல்போக சாகுபடிக்கு இடது மற்றும் வலதுபுற வாய்க்காலில், 177 கன அடி, மூன்று சிறிய மதகின் மூலம் தென்பெண்ணை ஆற்றில், 1,423 கன அடி என மொத்தம், 1,600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனால், தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்வதால், அணைக்குள் வர பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அணையிலிருந்து மேலும் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய, ஐந்து மாவட்ட தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு, பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் வழக்கமாக ஆற்றைக்கடக்கும் இடங்களில் தண்டோரா மூலமும், மைக் மூலமும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். அணையின் மொத்த உயரமான, 52 அடியில், 1.66 டி.எம்.சி., தண்ணீர் தேக்கி வைக்கலாம். நேற்று, 50.95 அடியில், 1.54 டி.எம்.சி., நீர்இருப்பு இருந்தது.

 

Tags :

Share via