நெல்லை தடுப்பூசி முகாமில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு

by Editor / 12-09-2021 08:33:40pm
நெல்லை தடுப்பூசி முகாமில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு

 

தமிழ்நாட்டில் இதுவரை ஒட்டுமொத்தமாக 3 கோடியே 74 லட்சத்து 8 ஆயிரத்து 989 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையானது தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மூலம் இன்று மாலைக்குள் 4 கோடியைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழக கேரள எல்லையில் இருக்கும் கன்னியாகுமரி, தென்காசி போன்ற 9 மாவட்டங்களில் 100% தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வேண்டும் என்று நாளை நடைபெற உள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக தமிழ்நாடு முழுவதும் இன்று 40 ஆயிரம் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் 951 கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக இம்மாட்டத்துக்கு 62 ஆயிரத்து 650 தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டன. அனைத்து முகாம்களிலும் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுச் செல்கின்றனர். இதனால் தடுப்பூசிகள் அனைத்தும் முழுமையாகச் செலுத்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

மரபியல் அணு ஆய்வகம்

இந்தியாவைப் பொறுத்தவரை பெங்களூரு, ஐதராபாத் போன்ற மாநிலங்களில் கொரோனாவில் இருந்து மாறுபட்ட வைரசைக் கண்டுபிடிப்பதற்கான 23 மரபியல் அணு ஆய்வகங்கள் உள்ளன. இந்த மாநிலங்களில் இருக்கும் ஆய்வங்கள் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றன. எந்த மாநில அரசும் தனியாக இந்த ஆய்வகத்தைப் பெற்றிருக்கவில்லை.தமிழ்நாட்டில் இந்த ஆய்வகம் இல்லாத காரணத்தால் மாறுபட்ட வைரசுகளைக் கண்டுபிடிப்பதற்காக அதற்கான மாதிரியை எடுத்து பெங்களூருவில் இருக்கும் ‘இன்ஸ்டம்’ என்ற ஆய்வகத்துக்கு அனுப்பி அதற்கான முடிவு பெறப்பட்டது. இந்த முடிவு வருவதற்கு மாதக் கணக்கிலும் ரூ.4 ஆயிரத்துக்கும் மேல் செலவும் ஆனது.

எனவே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு மாநில அரசு நிர்வகிக்கும் அளவிலான மரபியல் அணு ஆய்வகம் அமைக்க வேண்டும் என்று அறிவித்தார். அதன் அடிப்படையில் சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் ரூ.4 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மரபியல் அணு ஆய்வகத்தை நாளை மறுநாள் (14 ந் தேதி) முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார்.

இந்த ஆய்வகத்திற்கான இயந்திரங்களும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. சுகாதாரத் துறையின் சார்பில் 5 தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் பெங்களூரில் இருந்து இதற்கான பயிற்சியைப் பெற்று வந்திருக்கின்றனர். இந்தியாவிலேயே மாநில அரசு நிர்வகிக்கும் முதல் ஆய்வகம் இதுவாகும்.தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு மிகக் குறுகிய கால அவகாசம் இருந்ததால் தற்போது அதில் நாம் வெற்றி பெற முடியவில்லை. இருந்தாலும் இதில் நாம் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று முதலமைச்சர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வருவது மட்டும் இதற்குத் தீர்வாகாது. எனவே சட்ட ரீதியாக வலுவான தீர்மானத்தை எடுத்துச் செல்வதற்கு நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து அது தொடர்பாக அவர்கள் அளித்த அறிக்கை சட்ட வல்லுநர்களால் ஆராயப்பட்டு அந்த அறிக்கையின் மேல் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் உள்ளிட்ட செயலாளர்கள் குழு அமைத்து ஆராய்ந்த மிகச் சிறப்பான தீர்மானத்தை நாளை (13ந் தேதி) சட்டப்பேரவையில் முதலமைச்சர் கொண்டு வர உள்ளார். மேலும் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு அழுத்தம் கொடுக்கப்படும்.நீட் தேர்வு கடினமான ஒன்றாக இருந்தாலும் ஒவ்வொரு மாணவரும் மனம் தளராமல் இதை எதிர்கொள்ள வேண்டும் என்றும் தற்கொலை முயற்சியில் ஈடுபடக் கூடாது என்றும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு தொடரும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். எனவே தி.மு.க. அரசு மாணவர்களைக் காக்கும் அரசாக உள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டுமானப் பணிகள் தொடங்கி 4 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. ஆனால் தொடர்ந்து அப்பணிகளை மேற்கொள்ளாமல் இருந்து வருவதால் இதுவரை அங்கு சுற்றுச் சுவர் மட்டுமே இருக்கிறது. இதனால் அங்கு வெறும் கட்டாந்தரையில் மாணவர்கள் படிக்கும் நிலை சரியானதாக இருக்காது.

எனவே தேனி, நெல்லை போன்ற மாவட்டங்களில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்கலாம் என்று தமிழ்நாடு அரசு சார்பில் கேட்கப்பட்டுள்ள நிலையில் ஒன்றிய அரசு அதற்கான ஒப்புதலை இன்னும் தரவில்லை. இது ஒருபுறம் இருந்தாலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டுமானப் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

 

Tags :

Share via