பருவமழையை எதிர்கொள்ள ஆய்வுக் கூட்டம்
வடகிழக்குப் பருவமழை குறித்த ஆயத்தப் பணிகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தலைமையில் நேற்று (11 ந் தேதி) தலைமைச் செயலகத்தில் சம்மந்தப்பட்ட துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் பல்வேறுத் துறைச் செயலாளர்கள், சம்மந்தப்பட்ட துறைத் தலைவர்கள், ராணுவம், விமானப்படை, கப்பற்படை, கடலோரக் காவல் படை, இந்திய வானிலை ஆய்வு மையம், ஒன்றிய நீர்வள ஆணையம், தேசிய பேரிடர் மீட்புப் படை உள்ளிட்ட ஒன்றிய அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு,* பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்கும் பொருட்டு, குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், குறிப்பாக மழைநீர் வடிகால்களில் உள்ள அடைப்புகளை அகற்ற வேண்டுமெனவும், ஏரி மற்றும் குளங்களின் கரைகளைப் பலப்படுத்த வேண்டுமெனவும் அறிவுறுத்தினார். மேலும், வடிகால்கள் மற்றும் ஏரி குளங்களைத் தூர்வார நிலையான வழிகாட்டு நடைமுறைகளைத் தயாரிக்கவும் அறிவுரை வழங்கினார்.
* மேலும், பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கைத் தகவல்களை வழங்கும் வகையில் அனைத்து மாநகராட்சிகளிலும், மாவட்டங்களிலும் அவசரக் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட வேண்டும் எனவும், இந்திய வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்படும் எச்சரிக்கைச் செய்திகளை இந்த அவசரக் கட்டுப்பாட்டு மையங்களுக்கு அனுப்பப்படுவதை உறுதிசெய்ய வேண்டுமெனவும், அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
* பருவமழை துவங்குவதற்கு முன்னர் பேரிடர் தொடர்பான பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்க வேண்டும்மெனவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட வேண்டுமெனவும், பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கைத் தகவல்களை விரைந்து அளித்திடும் வகையில் குடியிருப்போர் நலசங்களின் பட்டியல் தயாரித்து வாட்ஸ் ஆப் குழு அமைக்க வேண்டும்.
இளைஞர்களுக்கு பயிற்சி
* கிராமப்புறங்களில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைளில் ஈடுபடுத்தும் பொருட்டு இளைஞர்களைத் கண்டறிந்து பயிற்சியளித்து, தேவையான மீட்பு உபகரணங்களை அவர்களுக்கு வழங்கி ஆயத்த நிலையை மேம்படுத்த வேண்டும்.
* நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் போதுமான அளவில் இருப்பு வைக்க வேண்டும்.
* அரசு சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
* தேடல், மீட்பு நிவாரணப் பணிகளில், தன்னார்வலர்கள் மற்றும் இளைஞர்களை ஈடுபடுத்த வேண்டும் என்றும், பேரிடர்களால் பாதிப்பிற்குள்ளாகும் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை மக்களுக்கு உடனுக்குடன் வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.* குறிப்பாகத் தொடர்புடைய துறைகள் மூலம் கீழ்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.
* பேரிடர் காலங்களில் நகரத்தில் ஏற்படும் வெள்ளத் தடுப்புப் பணிகளில் குறுகிய காலங்களில் நிறைவேற்றக் கூடிய திட்டப் பணிகளான
அ) மழைநீர் வடிகால் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளைச் சரிசெய்யவும்,
ஆ) மிகவும் பாதிப்படைந்த பகுதிகளைச் சீரமைக்கும் பணிகளையும் உடனடியாகச் செயல்படுத்திட வேண்டும்
இ) குளங்கள் மற்றும் ஏரிகளின் கரைகளை வலுப்படுத்தவும்
ஈ) நீர் நிலைகளை தூர்வாரும் பணிகளைத் துரிதமாகச் செயல்படுத்தவும்,
இப்பணிகளைப் பொதுப்பணித் துறை, நகராட்சி நிர்வாகம், சென்னை மாநகராட்சி, பேரூராட்சி, ஊரகவளர்ச்சித் துறைகள் மேற்கொள்ள வேண்டும். * மழைக்காலங்களில் சாலைகளில் விழும் மரங்களைச் சம்மந்தப்பட்ட துறைகள் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும், இது தொடர்பான புகார்களைச் சமூக வலைதளங்கள் (வாட்ஸ் அப், டுவிட்டர்) மூலம் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
* பாதிப்புக்குள்ளாகும் பகுதியிலுள்ள மக்களை அருகிலுள்ள சமுதாய கூடங்களில் தங்க வைக்கவும், நிவாரண மையங்களில் தரமான உணவு, மருத்துவ வசதி வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
* மாவட்டந்தோறும், ஏற்படும் அபாயங்களினால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளின் வரைபடம் கட்டாயம் தயார் செய்ய வேண்டும்.
* நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
* களப்பணியாளர்களுக்கு உரிய பயிற்சி அளித்து வெள்ளத் தடுப்பு திட்டங்களில் அனைத்துத் துறைகளின் அலுவலர்களும் ஒன்று சேர்ந்து குழுக்கள் அமைத்து வெள்ளத் தடுப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
* பாதிப்புக்கு உள்ளாகும் பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றும் போது முதியோர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் முன்னுரிமை அளித்திட, தன்னார்வலர்கள் மற்றும் மீட்புக் குழுவினருக்குப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
* பேரிடர் ஏற்படும் போது, பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளிலுள்ள கால்நடைகளை விடுபடாமல் பாதுகாப்பான தங்குமிடங்களுக்கு எடுத்துச் செல்லும் வகையிலான திட்டங்கள், பயிற்சிகளில் இடம்பெற வேண்டும். எதிர்வரும் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில், பேரிடர்களின் சவால்களைத் திறம்பட எதிர்கொள்ள அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென தலைமை செயலாளர் இறையன்பு அறிவுரை வழங்கினார்.
Tags :