குற்றவாளிகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்படுவார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் குற்றவாளிகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்படுவார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: வாணியம்பாடியைச் சேர்ந்த வாசிம் அக்ரம், கஞ்சா விற்பனையை காட்டிக் கொடுத்ததன் காரணமாக கூலிப்படையை ஏவி கடந்த 10ம் தேதி கொலை செய்யப்பட்டுள்ளார். குற்றவாளியை கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அந்தக் குடும்பத்துக்கு தேவையான நிதி வழங்க வேண்டும். கல்வித் தகுதிக்கு ஏற்ப ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அதேபோன்று நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், இந்த ஆண்டு தேர்வு நடைபெறாது என்று பல மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயார் செய்யவில்லை.
சேலம் மாவட்டத்தில் இதனால் ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டான். அந்தக் குடும்பத்துக்கு நிதி உதவியும் கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலையும் வழங்க வேண்டும் என்றார். பின்னர் அதிமுக உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வெளிநடப்பு செய்தனர். இதற்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: எதிர்க்கட்சித் தலைவர் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்னை குறித்து பேசினார். வாணியம்பாடி சம்பவத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியிருந்தார். இந்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 9 கிலோ கஞ்சா, 3 கத்தி, 10 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் இதுபோன்ற குற்றம் நடைபெறாமல் இருக்க, இரும்பு கரம் கொண்டு தமிழக அரசு அடக்கும். வாணியம்பாடியில் முழு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கலைஞர் முதல்வராக இருந்தபோது, 12ம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். பின்னர்ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும் அதே நடைமுறைதான் பின்பற்றப்பட்டது. 2017ம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பிறகுதான் தமிழகத்திற்கு நீட் வந்தது.
அனிதா உள்பட 13 மாணவர்கள் இறந்ததும் அதிமுக ஆட்சியில்தான். இந்த சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை குடியரசு தலைவர் திருப்பி அனுப்பியதை அவைக்கு தெரிவிக்காமல் மறைத்ததும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிதான். சேலம் மாவட்ட மாணவன், 2 முறை நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்ததும் எடப்பாடி ஆட்சியில்தான். நீங்கள் கூட்டணியில் இருக்கும்போது, ஒன்றிய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திற்கு அதிமுக ஆதரவு தேவைப்பட்டது. அப்போது, தமிழகத்தில் நீட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தால், நீட்டுக்கு விலக்கு கிடைத்திருக்கும். ஒன்றிய அரசை, வலியுறுத்தி நீட்டுக்கு விலக்குப் பெற தெம்பு மற்றும் திராணி இல்லாத ஆட்சிதான் உங்கள் ஆட்சி. எனவே, இந்த சட்டமசோதாவை தாக்கல் செய்யும்போது அனைவரும் ஆதரித்து ஆக்கப்பூர்வமாக நிறைவேற்றித் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
Tags :