ஊரக உள்ளாட்சி தேர்தல்: பாளையங்கோட்டையில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி

by Editor / 15-09-2021 03:54:10pm
ஊரக உள்ளாட்சி தேர்தல்: பாளையங்கோட்டையில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி

 நெல்லை, தென்காசி, செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை, மானூர், சேரன்மகாதேவி, நாங்குநேரி, வள்ளியூர் உள்ளிட்ட 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல், நாளை தொடங்கி வரும், 22ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் திருநெல்வேலி சிறப்பு துணை ஆட்சியர் குமாரதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலரும், வட்டார வளர்ச்சி அலுவலருமான பாலசுப்பிரமணியன், தேர்தல் உதவியாளர் இசக்கி ராஜா உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 50 பேர் பங்கேற்றனர்.
நாளை, வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில், வேட்பு மனு தாக்கலின்போது வேட்பாளர்கள் மற்றும் அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து, இக்கூட்டத்தில் அறிவுரை வழங்கப்பட்டது. மனுதாக்கலின் போது உரிய விதிமுறைப்படி கட்சிப் பிரதிநிதிகளை அனுமதிப்பது குறித்தும், வேட்புமனு விண்ணப்பத்தில் நிரப்ப வேண்டிய விவரங்கள் குறித்தும் அலுவலர்களுக்கு துணை ஆட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் பயிற்சி வழங்கினர்.
பயிற்சிக் கூட்டத்துக்கு பிறகு, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம், வேட்புமனு தாக்கலுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 237 வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via