தடைகளை உடைத்து தமிழினம் முன்னேற ஸ்டாலின் சூளுரை
அண்ணாவின் 113-வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று சென்னை, அண்ணா சாலையிலுள்ள அவரது திருவுருவச்சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அண்ணாவின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூகவலைதளங்களில் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அந்த வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
அன்பால் தமிழ்நாட்டை ஆண்ட பெரியாரின் கொள்கைக் கைத்தடி; ஆயிரமாண்டு ஆரியமாயை பொசுக்கிய அறிவுத்தீ; இந்தித் திணிப்புக்கெதிராய்ப் பாய்ந்த தமிழ் ஈட்டி; தில்லிக்குத் திகைப்பூட்டிய திராவிடப் பேரொளி பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாளில் தடைகள் உடைத்து, தமிழினம் முன்னேறச் சூளுரைப்போம் என ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்ச் சான்றோர்கள், விடுதலைப் போராட்டத் தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரைப் பெருமைப்படுத்தும் வகையில், அவர்களது பிறந்த நாளன்று தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
அண்ணா எனும் மூன்றெழுத்து மந்திரச் சொல் உச்சரித்திடும் போதினிலெல்லாம் புதிய சக்தியொன்று பிறந்திடும் நம்முயிர் நெஞ்சினிலே என்றெண்ணி வியந்திடுமளவிற்கு தன்னுடைய அறிவால், ஆற்றல் மிகுந்த பேச்சால், அன்பு செறிந்த அரவணைப்பால், தலைமைப் பண்பால் தமிழர்களைத் தலை நிமிரச் செய்தவர் அண்ணா என்றால் அதுமிகையில்லை. தாய்மொழித் தமிழ் மீது தணியாத தாகத்தினை தன் வாழ்நாளில் இறுதிவரை உறுதி கொண்ட அண்ணா, தந்தை பெரியாரையே தன் தலைவராகக் கொண்டு தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் இன்றும் வாழ்ந்து வருகிறார்.
பெயர் மாற்றங்கள்
அண்ணாவின் ஆட்சிக்காலம் குறுகியதே ஆனாலும், அடித்தள மக்கள் ஏற்றம் பெற்றிட எண்ணற்ற நல்ல பலதிட்டங்களை தந்திட்டவர். குறிப்பாக ‘சென்னை மாகாணம்’ என்று அழைக்கப்பட்டு வந்த நமது மாநிலத்தை, ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றம், சுயமரியாதை திருமணச் சட்டம், இந்தியாவிலேயே முதன்முறையாக அரசுப் பேருந்துகள் நாட்டுடமையாக்கம், கல்வியில் தமிழுக்கு முதலிடம், இருமொழிக் கொள்கை ஆகியன சான்றுகளாகும்.
குறிப்பாக 1967-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம்நாள், சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் ’தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்’ எனமாற்றம், தமிழக அரசின் முத்திரையான கோபுரச் சின்னத்தில் இருந்த ‘கவர்மெண்ட் ஆஃப் மெட்ராஸ்’ என்றஆங்கில வாக்கியம் நீக்கப்பட்டு, ‘தமிழ்நாடுஅரசு’ என மாற்றியதோடு, அரசு முத்திரையில் இடம் பெற்றிருந்த ‘சத்யமேவே ஜெயதே’ என்ற வடமொழி வாக்கியம் நீக்கப்பட்டு, ‘வாய்மையே வெல்லும்’ என அழகுத் தமிழிலும், மதராஸ் கவர்மெண்ட் தமிழ்நாடு அரசு எனவும், செக்ரடேரியட் தலைமைச் செயலகம் எனவும், அசெம்பிளி சட்டமன்றம் எனவும், ஸ்பீக்கர் பேரவைத் தலைவர் எனவும், மந்திரி அமைச்சர் எனவும், கனம் மாண்புமிகு எனவும், அண்ணாவின் அழகுத்தமிழாம் அமுதத் தமிழில் மாற்றம் கண்டது புதுவரலாறு.
இளைஞர்களின் ஏகோபித்த எழுச்சியினை ஈர்த்திட்ட அவர் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்கிற புதிய மூன்றெழுத்து மந்திரத்தையும் மக்களின் மனங்களிலே விதைத்தவர். அண்ணா முதலமைச்சராக மட்டுமன்றி, ஒரு தேர்ந்த அறிஞராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், தலைசிறந்த அரசியல் வாதியாகவும், மிகச் சிறந்த ஆற்றல் மிக்க பேச்சாளராகவும், இலக்கியவாதியாகவும், ஏகோபித்த மக்கள் தலைவராகவும், இன்றும் தமிழ் மக்களால் அவர் நினைவு கூறப்படுவதில் வியப்பில்லை.
கருணாநிதி சாதனை
அண்ணாவின் புகழினைப் போற்றிப் பாராட்டிடும் வகையில், கருணாநிதி ஆட்சிக்காலத்தில் அவர் கண்ட கனவினை நனவாக்கிடும் வகையில், எண்ணற்ற அரிய பல திட்டங்களை செயல்படுத்தி அடித்தள மக்களும் ஏற்றம் பெற்றது வரலாறு. குறிப்பாக, அனைத்து கிராமங்களுக்கும் சாலை மற்றும் மின்சார வசதி, குடிசை மாற்று வாரியம், இலவச கண் மருத்துவம், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு, கை ரிக்ஷா ஒழிப்பு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு தனி அமைச்சகம், வன்னியர் மற்றும் சீர்மரபினருக்கு 20 சதவிதம் இட ஒதுக்கீடு, முதல் வேளாண் பல்கலைக் கழகம், மீனவர்களுக்கு இலவச வீடு, நில உச்சவரம்பு சட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை வகுத்தளித்தவர்.
மேலும், தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பெண்களுக்கு சம சொத்துரிமைச் சட்டம், பெண்களுக்கு 30 சதவிகித இட ஒதுக்கீடு, ஏழைப் பெண்களுக்கு உதவித் தொகை, கைம்பெண் மறுமண உதவித் தொகை, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து, கிராமங்கள் புத்துணர்வு பெற அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், ஏழை எளிய மக்கள் இலவச மருத்துவம் பெற கலைஞர் காப்பீட்டுத் திட்டம், அண்ணாவின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், கடற்கரையில் நினைவிடம், தெற்காசியாவிலேயே மிகப் பெரிய அளவிலான அண்ணா நூற்றாண்டு நூலகம் என தான் வாழ்ந்த காலம் வரையில் அண்ணாவின் புகழுக்கு பெருமை சேர்த்து, அவரின் நினைவாக பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதன் பயனாக, இன்றைய தமிழகம் இந்தியாவிலேயே பல மாநிலங்களுக்கு முன்னோடியாகவும், முதன்மையாகவும் திகழ்கிறது.
அண்ணா, கருணாநிதி வழியில், “ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்” என்பதற்கேற்ப முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில், பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம், ஆவின் பால் விலை குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு, ஐந்து பவுன் வரை கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகைக்கடன் தள்ளுபடி, கொரோனா காலத்தில் மக்களின் துயர்துடைத்திட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 மற்றும் 14 வகை மளிகைப் பொருட்களின் தொகுப்பு, அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகளுக்கு நிவாரண உதவிகள் மற்றும் மாதாந்திர ஊக்கத் தொகை, மகளிர் சுயஉதவிக் குழு கடன் தள்ளுபடி, வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் போன்ற பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை “மக்களிடம் செல், மக்களோடு மக்களாக சேர்ந்து வாழ், மக்களுக்கு பணியாற்று” என்ற அண்ணாவின் அறிவுரைக்கேற்ப இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
இந்த நிகழ்வில், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் என்று செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags :