அக்டோபர் முதல் வாரத்தில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறக்க பரிந்துரை

by Editor / 16-09-2021 05:42:58pm
அக்டோபர் முதல் வாரத்தில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறக்க பரிந்துரை

அக்டோபர் முதல் வாரத்தில் 6 முதல் 8 வரையிலான வகுப்புகளை தொடங்க கல்வி அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர் என பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்து ஆய்வு அறிக்கையை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் ஸ்டாலினிடம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்.

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் நடைபெற்ற ஆலோசனையின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது:

1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை திறப்பது குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 6 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை திறக்கலாம் என்று சில மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பாக பொது சுகாதாரத் துறையினரும், மருத்துவ வல்லுநர்களும் தங்களது பரிந்துரைகளை வழங்குவர். வரும் 30ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக, பொதுமுடக்கம் நீட்டிப்பு தொடர்பாக முதல்வர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பொது சுகாதாரத் துறை, மருத்துவ வல்லுநர்கள் கூடி ஆலோசனை நடத்துவர். இதில் பள்ளிகள் திறப்பது தொடர்பாகவும் விவாதித்து முடிவு எடுக்கப்படும். எனவே அக்டோபர் முதல் வாரத்தில் பள்ளி திறக்கப்படலாம். பள்ளிகள் திறப்பது தொடர்பான அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார்.தனியார் பள்ளி மாணவர்களை அந்தந்த கல்வி நிறுவனப் பேருந்துகளில் வர வேண்டும் என நிர்பந்திப்பதாகவும், அரசின் சலுகை பயணச் சீட்டில் பயணம் செய்ய சான்று அளிப்பதில்லை எனவும் பெறப்பட்டுள்ள புகார்கள் குறித்து விசாரித்து உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

 

Tags :

Share via