விவசாயி கொலை: முன்னாள் ஊராட்சித் தலைவருக்கு இரட்டை ஆயுள்
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுகா கீழத்திருப்பாலக்குடியை சேர்ந்த விவசாயி க. தமிழ்செல்வன். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஆசைத்தம்பி. இவர்கள் இருவர் வீட்டுக்கும் இடையே வேலி பிரச்னை இருந்து வந்தது. இது தொடர்பாக அவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், உள்ளிக்கோட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்த பொய்யாமொழி (முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்) என்பவர் ஆசைத்தம்பிக்கு ஆதரவாக தமிழ்ச்செல்வன் வீட்டுக்குச் சென்று பேசியுள்ளார். அப்போது, தமிழ்ச்செல்வனுக்கும், பொய்யாமொழிக்கும் இடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் நடைபெற்றுள்ளது. அப்போது பொய்யாமொழியின் மேல் சட்டை கிழக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பொய்யாமொழி கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். அதன் பிறகு ஒரு வாரம் கழித்து தமிழ்ச்செல்வன் படுகொலை செய்யப்பட்டார்.
கடந்த 25.12.2005 அன்று நடைபெற்ற சம்பவத்தின்போது தமிழ்ச்செல்வனின் வலது கையை கொலையாளிகள் வெட்டி எடுத்துச் சென்று விட்டனர். சம்பவ இடத்தின் அருகே போலீஸார் நடத்திய சோதனையில், அங்கு நாட்டு வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து, அவற்றை அழித்தனர்.
இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக பொய்யாமொழி, அவரது உறவினரும் வழக்கறிஞருமான இளங்கோவன், ஆசைத்தம்பி, பொய்யாமொழியின் சகோதரர் செல்வம் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. மேலும், கொலை சம்பவத்தை தூண்டியதாகவும், கொலைக் குற்றத்துக்கு உறுதுணையாக இருந்ததாகவும் கூறி பொய்யாமொழியின் தாயார் பத்மாவதி, மனைவி கயல்விழி, மாமனாரான மற்றொரு இளங்கோவன், வாகன ஓட்டுநர் அமுதரசன், வழக்கறிஞர் இளங்கோவனின் மனைவி கனிமொழி ஆகியோர் மீது பரவாக்கோட்டை காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில், வழக்குரைஞர் இளங்கோவன், ஓட்டுநர் அமுதரசன் ஆகியோருக்கு கடந்த 30.9.2019 அன்று பூந்தமல்லி வெடிகுண்டு வழக்குகள் சிறப்பு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது. வழக்கில் தொடர்புடைய மூன்று பெண்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த பொய்யாமொழி கடந்த 23.11.2019 அன்று கைது செய்யப்பட்டார். பொய்யாமொழி மீதான வழக்கில் பூந்தமல்லி வெடிகுண்டு வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.இந்த வழக்கில் 30 அரசு சாட்சிகள் விசாரிக்கபட்டனர். 14 பொருள்களும், 50 ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் நீதிபதி வேல்முருகன் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கினார்.
இதில், பொய்யாமொழி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். அபராத தொகையில், ரூ.50 ஆயிரத்தை இறந்து போன தமிழ்செல்வனின் மனைவி மஞ்சுளாவிற்கு கொடுக்கவும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட செல்வம் மற்றும் ஆசைதம்பி ஆகியோர் இன்னும் தலைமறைவாக இருக்கின்றனர். மற்றொரு இளங்கோவன் இறந்துவிட்டார். இந்த வழக்கிலும், ஏற்கனவே இளங்கோவன், அமுதரசன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை கிடைத்த வழக்கிலும் காவல் துறை சார்பில் சிறப்பு வழக்குரைஞர் என்.விஜயராஜ் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினார்.
Tags :