உலகின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த  நகரம்: முதலிடத்தில் மும்பை

by Editor / 23-09-2021 03:57:31pm
உலகின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த  நகரம்: முதலிடத்தில் மும்பை



உலகில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் மும்பை மாநகரம் முதலிடத்தில் உள்ளது.
சாலைகளில் பயணம் செய்யும்போது மக்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் போக்குவரத்து நெரிசல். குறிப்பாக மக்கள்தொகை அதிகமுள்ள நகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். இதனால் செல்ல வேண்டிய இடத்துக்குச் சரியான நேரத்தில் போய் சேர முடியாத நிலையும் ஏற்படும்.


இந்த நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த (Hiyacar) மோட்டார் நிறுவனம், போக்குவரத்து நெரிசல் குறித்து சர்வதேச அளவில் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த 36 நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தனிநபர் கார்களின் எண்ணிக்கை, நகரத்தில் உள்ள மொத்த வாகன சுமை மற்றும் நகரத்தின் போக்குவரத்து நெரிசலின் தீவிரம், சாலைகளின் தரம், பொது போக்குவரத்து பயன்பாடு, ஆண்டுக்கு போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை மற்றும் நகர அடர்த்தி ஆகிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் பத்துக்கு 7.4 புள்ளிகளை பெற்று மும்பை முதலிடத்தில் உள்ளது. பத்துக்கு 5.9 புள்ளிகளை பெற்று டெல்லி நான்காவது இடத்தையும், பெங்களூரு, 11வது இடத்தையும் பிடித்துள்ளன என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டில் ‘டாம்டாம்’ டிராபிக் இன்டெக்ஸ் நிறுவனம், நடத்திய ஆய்வில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள் பட்டியலில் பெங்களூரு முதலிடத்தில் இருந்தது. 2018 ஆம் ஆண்டில் மும்பை முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீண்டும் மும்பை நகரம் முதலிடத்துக்கு வந்துள்ளது.

 

Tags :

Share via