இட ஒதுக்கீடு நெறி மீறும் பாரத ஸ்டேட் வங்கி:  சு.வெங்கடேசன் கண்டனம்

by Editor / 23-09-2021 07:33:17pm
இட ஒதுக்கீடு நெறி மீறும் பாரத ஸ்டேட் வங்கி:  சு.வெங்கடேசன் கண்டனம்

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 8653 ஜூனியர் அசோசியேட் பணிகளுக்காக நடத்தப்பட்ட முதல் நிலை தேர்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதில், உயர்சாதி ஏழைப்பிரிவைச் (EWS) சேர்ந்த மாணவர்களை விட அதிக மதிப்பெண்கள் பெற்றால்தான் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோருக்கு ஸ்டேட் வங்கியில் பணி கிடைக்கும் வகையில் இட ஒதுக்கீடு பின்பற்று வருவது சமூக நீதியை மீறும் செயல் என அரசியல் நோக்கர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ளது.
அவ்வகையில், மதுரை மக்களவை உறுப்பினரான சு.வெங்கடேசன் பாரத ஸ்டேட் வங்கியின் பாகுபாடு குறித்து கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "ஸ்டேட் வங்கி துவக்க நிலைத் தேர்வு முடிவுகளில் இட ஒதுக்கீடு நெறி முறைகள் தொடர்ந்து மீறப்படுகின்றன. 2020ல் இருந்து இந்த பிரச்சினை குறித்து நிதி அமைச்சகம், சமூக நீதி அமைச்சகத்திற்கு கடிதங்கள் அனுப்பி வருகிறேன்.
அவர்கள் அக்கடிதங்களை ஸ்டேட் வங்கிக்கு அனுப்புவதும் தாங்கள் இட ஒதுக்கீடு நடைமுறையை கடைப்பிடிப்பதாக பதில் தருவதும் வாடிக்கையாக உள்ளது. 22.10.2020, 27.11.2020, 11.12.2020, 28.12.2020, 07.01.2021 என வரிசையாக எனது கடிதங்கள், அமைச்சகம், ஸ்டேட் வங்கியின் பதில்களைப் பார்த்தால் அவையே இட ஒதுக்கீடு நெறிகளை அவர்கள் மீறுவதற்கு சாட்சியங்கள் ஆக உள்ளன.ஒவ்வொரு முறை தேர்வு முடிவுகள் வரும் போதும் பரபரப்பும், சர்ச்சையும் ஏற்படுவதுமாக உள்ளது. அரசும், ஸ்டேட் வங்கியும் மீறல்களை தொடர்கின்றன. ஆகவே பிரச்சினையின் வேர் அடையாளம் காணப்பட வேண்டும். மீண்டும் அமைச்சகத்திற்கு கடிதம் எழுதுகிறேன். ஆனால் இந்தக் கடிதம் வழக்கம் போல ஸ்டேட் வங்கிக்கு அனுப்பப்படுவதற்காக அல்ல. குற்றவாளிகளே தீர்ப்பு எழுதிக் கொள்ளலாமா?
தற்போதைய முடிவிலும் பொதுப் போட்டி, ஓ. பி.சி, எஸ்.சி பிரிவினருக்கு ஒரே கட் ஆப் 61.75 இருப்பது எப்படி? பொதுப் போட்டியில் தேர்வான இட ஒதுக்கீட்டு பிரிவினரை இட ஒதுக்கீட்டு கணக்கில் சேர்ப்பது அப்பட்டமான மீறல். பொதுப் பட்டியல் கட் ஆப் க்கு அதிகமான மதிப்பெண் பெற்ற இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் பொதுப் பட்டியலிலேயே கணக்கு வைக்கப்பட வேண்டும்.
இதற்கு ஸ்டேட் வங்கி பதில் அளிக்க வேண்டாம். சமூக நீதி அமைச்சகம் இட ஒதுக்கீட்டு நெறிமுறைகளில் கற்றுத் தேர்ந்த நிபுணர்களை கொண்ட குழுவை அமைத்து விசாரிக்கட்டும். அதில் இட ஒதுக்கீடு பிரிவைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களும், சமூக நீதி ஆர்வலர்களும் இடம் பெற வேண்டும். இப் பிரச்சினையில் தீர்வு காணப்படும் வரையில் எனது முயற்சிகள் தொடரும். நாடாளுமன்றத்திலும் இதற்கான குரல் கேட்கும்." என சு.வெங்கடேசன் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via