ரேஷன் கார்டு கேட்டு 5 மாதங்களில் 10 லட்சம் விண்ணப்பம்
தமிழ்நாட்டில் கடந்த ஐந்து மாதங்களில் புதிய ரேஷன் கார்டு வழங்கக் கோரி 10 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசு அமைந்ததைத் தொடர்ந்து, 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த ஜூன் 21ஆம் தேதி நடந்தது. அன்று ஆளுநர் உரையில்,”ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பம் செய்யும் தகுதியுள்ள அனைவருக்கும் 15 நாட்களுக்குள் வழங்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.இதையடுத்து, புதிய ரேஷன் கார்டு வழங்கக் கோரி விண்ணப்பிக்கும் நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து இன்று உணவு வழங்கல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,” தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி வரையிலும் 10,54,327 பேர் புதிய ஸ்மார்ட் கார்டு கேட்டு விண்ணப்பம் செய்துள்ளனர்.
அதில், 7,28,703 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 2,61,844 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மேலும், 6,65,102 விண்ணப்பங்களுக்கு புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. 63,601 ஸ்மார்ட் கார்டு அச்சிடும் பணி நடைபெற்று வருகிறது. 63,780 விண்ணப்பங்கள் வைப்பில் உள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக, தென் சென்னையில் 67,051 நபர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதில், 36,815 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், 12,754 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மேலும், 27,829 பேருக்கு ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ள நிலையில், 8986 பேருக்கு ரேஷன் கார்டு அச்சிடும் பணி நடைபெற்று வருகிறது.
கடந்த 5 மாதங்களில், கோவை மாவட்டத்தில் 65,003 பேர்களும், சேலம் மாவட்டத்தில் 59,495 பேர்களும் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :