போலி பத்திரம், போலி ஆவணங்களை  ரத்து செய்ய சார் பதிவாளருக்கு அதிகாரம் புதிய சட்டத்திருத்தத்துக்கு கவர்னர் ஒப்புதல்

by Editor / 30-09-2021 03:32:26pm
போலி பத்திரம், போலி ஆவணங்களை  ரத்து செய்ய சார் பதிவாளருக்கு அதிகாரம் புதிய சட்டத்திருத்தத்துக்கு கவர்னர் ஒப்புதல்



போலி பத்திரம், போலி ஆவணங்களை ரத்து செய்யும் அதிகாரத்தை, சார் பதிவாளருக்கு வழங்கும் தமிழ்நாடு அரசின் சட்ட திருத்தத்திற்கு கவர்னர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் போலி பத்திரப்பதிவுகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இதனையடுத்து, பத்திரப்பதிவு சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான சட்ட மசோதா, அண்மையில் நடைபெற்ற சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேறியது.அதாவது, போலி பத்திரப்பதிவு தொடர்பாக மாவட்ட சார் பதிவாளரே விசாரணை செய்து ரத்து செய்யலாம். மேலும், போலி பத்திரம் பதிவு செய்யப்பட்டதாக கண்டு பிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட வர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கவும், அபராதம் வசூலிக்கவும் சட்டத் திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டு, இந்த சட்ட முன்வடிவு கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்நிலையில், இந்த சட்ட திருத்தத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.


தமிழ்நாடு அரசின் சட்டத் திருத்தத்துக்கு புதிய கவர்னர்அளித்த முதல் ஒப்புதல் இதுவாகும். இதனையடுத்து, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக சட்ட மசோதா அனுப்பப்பட் டுள்ளது.ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று, இந்த சட்டத் திருத்தம் அமலுக்கு வரும் நிலையில், இனி போலி பத்திரப்பதிவை ரத்து செய்ய கோரி பொதுமக்கள் நீதிமன்றத்தை தேடி செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.மாறாக, பதிவுத்துறை மூலம் உரிய விசாரணை நடத்தி போலி பத்திரப்பதிவை ரத்து செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via