17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பாகிஸ்தான் நோக்கி ‘ஷாகீன்’ புயல்

by Editor / 30-09-2021 03:39:41pm
17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பாகிஸ்தான் நோக்கி ‘ஷாகீன்’ புயல்

 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில்திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளி யிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:


வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (30ந்தேதி) தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.


வட மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தர்மபுரி, சேலம், நாமக்கல், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது.


நாளை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
தென் மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, டெல்டா மாவட்டக்ஙளான தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பட்டுக்கோட்டையில் 9 செ.மீ.மழை பதிவாகி உள்ளது. பெருங்கலூர் 8 செ.மீ., ஈரோடு 7 செ.மீ., திருச்செங்கோடு, மதுக்கூர் தலா 5 செ.மீ., அதிரமப்பட்டணம், சிவகங்கை தலா 4 செ.மீ., புள்ளம்பாடி, முத்துப்பேட்டை, பேராவூரணி தலா 3 செ.மீ., கறம்பக்குடி, சோழவந்தான், அருப்புக்கோட்டை, சோலையாறு, வல்லம் வாடிப்பட்டி, வெம்பாக்கம் தலா 2 செ.மீ., மகாபலிபுரம், ராமநாதபுரம், வேலூர், திருத்துறைப்பூண்டி தலா 1 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.


2 ந்தேதி முதல் 3 நாட்கள் குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
‘ஷாகீன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் பாகிஸ்தான் நோக்கி செல்லக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘குலாப்’ புயலாக மாறிய கடந்த 26–ந்தேதி ஆந்திராவில் கரையை கடந்தது. இந்த குலாப் புயல் தெலுங்கானா, மகாராஷ்டிரா முழுவதும் நகர்ந்தது. நேற்று தெற்கு குஜராத் மீது மையம் கொண்டிருந்தது. இந்தநிலையில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி  வட அரபிக்கடலில் புயலாக உருவெடுக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ‘ஷாகீன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் பாகிஸ்தான் நோக்கி செல்லக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் இந்தியா மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளின் மீனவர்கள் 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via