திருத்தணி கோவிலில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆய்வு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி இன்று திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புதிய திருமண மண்டபம், நிர்வாக பயிற்சி பள்ளி, இசை பள்ளி உள்ளிட்ட கட்டுமான பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது அமைச்சர் பி.கே. சேகர்பாபு கூறியதாவது:
கடந்த சட்டமன்ற துறை மானியக் கோரிக்கையின்போது, திருக்கோயில்களில் பக்தர்கள் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு முடி காணிக்கை செலுத்துவதற்கு கட்டணம் இல்லை என்ற அறிவிப்பு 4.9.2021 அன்று அறிவிக்கப்பட்டு 5.9.2021 அன்று அனைத்து திருக்கோயில்களிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றிக்கொள்ள செலுத்தப்படும் முடிக்காணிக்கைக்கு கட்டணம் இல்லை என்ற திட்டத்தை கணினி மயமாக்கப்பட்டு மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முடி காணிக்கை செலுத்தும் பக்தர்கள் வரிசையில் வந்து முடி காணிக்கை செலுத்தும் இடத்தின் அருகில் உள்ள மின்னணு யந்திரத்திற்கு முன் நின்று 89399 71540 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தால் அவருடைய புகைப்படத்துடன் கூடிய கட்டணமில்லா முடிக்காணிக்கை அனுமதிசீட்டு அவ்விடத்திலேயே திருக்கோயில் பணியாளர்களால் வழங்கப்படும். இதற்காக 35 நாவிதர் பணியாளர்களை கொண்டு இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இத்திருக்கோயிலில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்படவுள்ள நவீன திருமண மண்டபத்திற்கான பணிகளை உடனடியாக துவங்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுப்பட்டுள்ளது. மேலும், திருக்கோயிலில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் துவங்கப்படவுள்ள நாதஸ்வரம், தவில் இசை பயிற்சி பள்ளி, ரூ.5 கோடி மதிப்பீட்டில் திருக்கோயிலுக்கான நிர்வாக பயிற்சி பள்ளி இடத்தினை ஆய்வு மேற்கொண்டு பணிகள் துவங்க ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மலைக்கோயிலில் கம்பிவட ஊர்தி அமைப்பதற்கும், மாற்று மலைப்பாதை அமைப்பதற்கான சாத்திய கூறுகள் ஆராயப்பட்டு வருகிறது.
Tags :