விவசாயிகளிடம் இருந்து மட்டுமே  நெல் கொள்முதல்: உறுதி செய்ய புதிய முறை அமல் 

by Editor / 30-09-2021 06:26:39pm
விவசாயிகளிடம் இருந்து மட்டுமே  நெல் கொள்முதல்: உறுதி செய்ய புதிய முறை அமல் 


விவசாயிகளிடம் இருந்து மட்டுமே நெல் கொள்முதல செய்ய மத்திய அரசு புதிய கொள்முதல்முறையை அறிமுகம் செய்துள்ளது. அக்டோபர் மாதம் முதல் தேதியிலிருந்து புது முறை அமலுக்கு வருகிறது.


இதன்படி நெல்விளைந்த நிலத்தின் ஆவண விவரங்களை தெரிவிக்கவேண்டும். நிலப்பட்டா, நிலத்தின் உரிமையாளர் பெயர் முதலிய விவரங்களை தெரிவிக்க வேண்டும். அவை பதிவு செய்யப்படும். இதன் மூலம் வியாபாரிகள் விவசாயிகளாக வந்து நெல்லை சந்தை விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்க இயலும்.


நெல் கொள்முதல் செய்வதற்கு முன்பாக விவசாயிகளின் நில ஆவணங்கள் சரிபார்க்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. விவசாயிகள் விளைவித்த நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதை உறுதி செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக உணவுத்துறை செயலாளர் சுதன்ஷு பாண்டே தெரிவித்தார்.


விவசாயிகளின் நலனுக்காகவே இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாக கூறிய அவர், விவசாயிகள் சொந்த நிலத்தில் விவசாயம் பார்க்கிறார்களா?  அல்லது குத்தகைக்கு எடுக்கிறார்களா?  என்பதை அறிந்து கொள்ள இந்த புதிய திட்டம் உதவும் எனக் கூறினார்.


சொந்த நிலமாக இருந்தாலும் சரி, குத்தகை நிலமாக இருந்தாலும் கொள்முதல் செய்யப்படும் என்று உறுதி அளித்த சுதன்ஷு பாண்டே, எவ்வளவு நெல் விளைவிக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ளவும் நில ஆவணங்களை டிஜிட்டல்படுத்தவும் மத்திய அரசின் திட்டம் உதவும் எனக் கூறினார். முழுக்க முழுக்க விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுவதை உறுதிப்படுத்தவே நில ஆவணங்கள் சரிபார்க்கப்படுவதாக அவர் கூறினார்.வர்த்தகர்கள் மற்றும் இடைத் தரகர்களிடம் இருந்து நெல் கொள்முதலை மத்திய அரசு ஆதரிக்காது எனக் கூறினார்.

 

Tags :

Share via