அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை  திடீர் சோதனை - ரூ.27 லட்சம் பறிமுதல் 

by Editor / 01-10-2021 04:34:08pm
 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை  திடீர் சோதனை - ரூ.27 லட்சம் பறிமுதல் 

 

தீபாவளி வசூல் வேட்டை புகாரை அடுத்து, தமிழகம் முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத லட்சக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பத்திரப்பதிவுத்துறை அலுவலகம், வட்டார போக்குவரத்து துறை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் வசூல் வேட்டை நடத்துவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் வந்தது. அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.


ராமநாதபுரம் வண்டிக்கார தெரு பகுதியில் செயல்படும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத 5 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்ற சோதனை சுமார் 7 மணி நேரமாக நீடித்தது. இறுதியாக 70 ஆயிரம் ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.


திருவண்ணாமலையில் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத மூன்றரை லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுதொடர்பாக மாவட்ட நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 4 மணி நேரத்திற்கும் அதிகமாக சோதனை நடத்திய அதிகாரிகள் கணக்கில் வராத 1 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்தனர்.


மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், கணக்கில் வராத 51 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக வட்ட வழங்கல் அலுவலர் அழகர்சாமியிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதேபோல, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சுமார் 3 மணி நேரம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 950 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.


சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடத்திய சோதனையில் சுமார் 60 ஆயிரம் பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் 7 பேரிடம் சுமார் 4 மணி நேரமாக விசாரணை நடைபெற்றது. கடலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிதம்பரம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் சக்திவேல், உதவியாளர் சந்திரசேகர் ஆகியோரிடம் இருந்து பணம் கைப்பற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.


திருச்சி மாவட்டம். மணப்பாறையை அடுத்த மாகாளிப்பட்டி வட்டார போக்குவரத்துத்துறை அலுவலகதத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி.மணிகண்டன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அங்கு கணக்கில் வராத 60 ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. வேலூர் மாவட்டம் வேலப்பாடி பகுதியில் செயல்படும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் 1 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பத்திரப்பதிவு அலுவலர்களின் வாகனங்கள் மற்றும் அறைகளில் சோதனை நடத்தப்பட்டது,


வேலூர் மாவட்டம் காட்பாடி கிறிஸ்டின் பேட்டை பகுதியில் உள்ள ஆர்டிஓ சோதனைச் சாவடியில் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திர மாநிலத்தில் இருந்து வேலூர் மாவட்டத்திற்கு வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்தனர். திருநெல்வேலி சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத 40 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரு பத்திரப்பதிவிற்கு 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சமாக பெறுவதும் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.


இதேபோன்று, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திலும், லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சார் பதிவாளர் மற்றும் உதவி அலுவலர்கள், பத்திர எழுத்தர்கள் உள்ளிட்டோர் அலுவலகத்தின் உள்ளே இருந்ததை அடுத்து கதவுகள் பூட்டப்பட்டு சோதனையிடப்பட்டது. நள்ளிரவு 12 மணி வரை நீடித்த சோதனையில் கணக்கில் வராத 38 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடைபெறும் நிலையில் யாரும் கைது செய்யப்படவில்லை.

 

Tags :

Share via